இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், சில தசாப்தங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. முதலில் டிக்டாக் செயலியில் வைரலான அந்த வீடியோ, பின்னர் ட்விட்டரிலும் பகிரப்பட்டது. இரண்டு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த #lettertoamerica என்ற ஹாஷ்டாகை டிக்டாக் நிறுவனம் நீக்கியது. பல சமூக வலைதள பயன்பாட்டாளர்கள், ஒசாமாவின் இந்த கடிதம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீடுகளை மாற்றுக் கண்ணோட்டத்தில் வழங்குவதாக கூறுகின்றனர். மேலும் சிலர், அந்த கடிதத்தின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புவதுடன், அதை கண்டித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர்.
ஒசாமா அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தார்?
அந்த கடிதத்தின் வாயிலாக அமெரிக்க மக்களிடம் உரையாற்றிய ஒசாமா, பின்வரும் கேள்விகளுக்கான பதிலையும் வழங்க முயன்றார். "நாங்கள் ஏன் போராடுகிறோம், எதிர்க்கிறோம்?" மற்றும் "நாங்கள் உங்களை எதற்காக அழைக்கிறோம், உங்களிடமிருந்து எங்களுக்கு என்ன வேண்டும்?" என்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தது. மேலும் அந்த கடிதத்தில், யூதர்களுக்கு எதிரான வகையில் எழுதப்பட்டிருந்ததாக என்பிசி செய்தி தெரிவிக்கிறது. அந்த கடிதத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை கண்டித்த ஒசாமா, பாலஸ்தீன மக்களின் ஒடுக்கப்படுவதற்கு அமெரிக்காவை குற்றம் சாட்டியிருந்தார். ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, செச்சினியா மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகளில், அமெரிக்காவின் தலையிடையும் ஒசாமா அவரின் கடிதத்தில் கண்டித்து இருந்தார்.
ஒசாமாவின் கடிதத்திற்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை
சமூக வலைதளங்களில் ஒசாமாவின் கடிதம் பரப்பப்படுவதற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. "ஒசாமா பின்லேடனின் கீழ்த்தரமான வார்த்தைகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு, இன்னும் தங்களின் அன்புக்குரியவர்களுக்காக வருந்தும் 2,977 அமெரிக்க குடும்பங்களை யாரும் அவமதிக்கக்கூடாது." எனக் கூறியுள்ளது. அமெரிக்காவில் பல அரசியல் தலைவர்களும் இந்த கடிதம் மீண்டும் பரப்பப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் சமூக ஊடக சீர்திருத்தத்தையும் கோரிவருகின்றனர். ஒசாமாவின் கடிதத்துடன் வளம் வரும் வீடியோக்கள், டிக்டாக் செயலியின் வழிமுறைகளை மீறுவதாகவும், அவற்றை கண்டறிந்து நீக்கி வருவதாகவும் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பென் ராதே தெரிவித்துள்ளார்.