ஜென்சன் ஹுவாங் சர்ச்சையில் புதிய திருப்பம்: மற்றொரு ஊழியருடன் 3-வது தொடர்பு அம்பலம்
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி ஏ.ஐ சிப் நிறுவனமான என்விடியாவின் சிஇஓ பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங் மீது, அந்நிறுவனத்தின் மற்றொரு ஊழியருடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்ததாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம், ஜென்சன் ஹுவாங்கின் ராஜினாமாவுக்கு காரணமாக அமைந்த சர்ச்சையில் மூன்றாவது திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 33 ஆண்டுகளாக தான் இணைந்து உருவாக்கிய என்விடியா நிறுவனத்திலிருந்து 63 வயதான ஜென்சன் ஹுவாங் நேற்று விலகினார்.
தொடர்புகள்
அம்பலமான 3 ரகசியத் தொடர்புகள்
ஆலிஸ் ஹுவாங்: சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட மெகாஸ்பீட் கிளவுட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியும், சீனத் தொழிலதிபருமான இவருடன் ஹுவாங்கிற்கு தொடர்பு இருந்தது. இவருக்கு சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கிறது.
கிம்பர்லி பவல்: ஜென்சன் ஹுவாங்கின் கீழ் பணியாற்றி வந்த என்விடியாவின் சுகாதாரத் துறை துணைத் தலைவரான கிம்பர்லி பவலுடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது என்விடியாவின் மற்றொரு ஊழியருடனும் ஹுவாங்கிற்கு நெருக்கமான தொடர்பு இருந்ததாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது (அவரது பெயர் வெளியிடப்படவில்லை).
முன்னதாக நவம்பர் 8-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பெயரை குறிப்பிடாமல் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை ஹுவாங் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சிஎஃப்ஓ கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகும் ஜென்சன் ஹுவாங்
பதவியை ராஜினாமா செய்த பிறகும் ஜென்சன் ஹுவாங்கிற்கு நெருக்கடிகள் குறையவில்லை.
நவம்பர் இறுதியில் வரும் தேங்க்ஸ்கிவிங் விடுமுறைக்கு முன்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஹுவாங் சம்மதித்துள்ளதாக குழுவின் தலைவர் பிரையன் மாஸ்ட் தெரிவித்துள்ளார்.
அங்கு அவரது தனிப்பட்ட தொடர்புகள், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஆலிஸ் ஹுவாங் விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே, வெளிநாட்டு உளவுத்துறையின் வலையில் ஹுவாங் சிக்கினாரா என்பது குறித்து என்விடியா இயக்குநர் குழுவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள புகழ்பெற்ற பால் வெயிஸ் சட்ட நிறுவனத்தை ஜென்சன் ஹுவாங் நியமித்துள்ளார்.