Page Loader
ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு

ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு

எழுதியவர் Srinath r
Jan 04, 2024
06:58 pm

செய்தி முன்னோட்டம்

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 7.5 ரிக்டராகப் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. 72 மணி நேரத்திற்குப் பிறகு, இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறையும் என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஜப்பானின் இஷிகாவா தீவிற்கு அருகில் கடற்பகுதியில், 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பலமுறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விளக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில், தற்போது வரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

2nd card

வாஜிமா நகரத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவு

நிலநடுக்கத்தில் இஷிகாவா மாகாணம் அதிக பாதிப்பை எதிர்கொண்டது. இறந்தவர்கள் அனைவரும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 48 பேர் வாஜிமா நகரிலும், 23 பேர் சுஸு நகரிலும் உயிரிழந்துள்ளதாக இஷிகாவா அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற 13 உயிரிழப்புகள் ஐந்து அண்டை நகரங்களில் பதிவாகியுள்ளன. 330க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அதில் குறைந்தது 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் 51 நபர்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

3rd card

மீட்பு பணியில் 4,000 வீரர்கள்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா முதலில் அனுப்பப்பட்ட 1,000 வீரர்கள் உடன், கூடுதலாக 3,000 வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 34,000 பேருக்கு, தேவையான உணவு மற்றும் உபகரணங்கள் வழங்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கிய 150 இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். தொடர் மழைப்பொழிவு மற்றும் பனிபொழிவால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் நிலச்சரிவு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இது மீட்பு பணிகளை மேலும் கடினமாகியுள்ளது.