Page Loader
காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல்

காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல்

எழுதியவர் Srinath r
Dec 16, 2023
09:24 am

செய்தி முன்னோட்டம்

காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில், ​​"அச்சுறுத்தல்" என்று தவறாகக் கருதி மூன்று பணயக் கைதிகளை அதன் படைகள் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. காசா நகரில் உள்ள அடர்ந்த பகுதியான ஷெஜாயாவில் போரின் போது, ​​இஸ்ரேலிய இராணுவம், "மூன்று இஸ்ரேலிய பணயக் கைதிகளை அச்சுறுத்தலாக தவறாக அடையாளம் கண்டுகொண்டது" என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. ராணுவ வீரர்கள் மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன. கொல்லப்பட்ட பணயக் கைதிகளின் உடல்கள் இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டு, அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இஸ்ரேலால் கொல்லப்பட்ட மூவரும் அக்டோபர் 7 தாக்குதலில், கிப்புட்ஸ் கஃபர் ஆசா பகுதியில் இருந்து, ஹமாஸ் அமைப்பால் பணயக் கைதிகளை பிடித்து செல்லப்பட்டவர்கள்.

2nd card

தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம்

சமர் தலால்கா, யோதம் ஹைம் மற்றும் அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் கொல்லப்பட்ட பணயக் கைதிகளாக, இஸ்ரேல் அறிவித்துள்ளது. தவறான தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் உடனடியாக, இந்த விவகாரத்தில் பகுப்பாய்வு செய்ய தொடங்கி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. "இந்த துயர சம்பவத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது மற்றும் குடும்பங்களுக்கு அதன் இதயப்பூர்வமான இரங்கலை கூறிக்கொள்கிறது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் மீட்பதே எங்கள் தேசியப் பணி" என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3rd card

பணயக் கைதிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் இரங்கல்

பணயக் கைதிகள் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,"முழு இஸ்ரேல் மக்களுடன் சேர்ந்து, எங்கள் மூன்று பணயக் கைதிகளின் மரணத்திற்கு ஆழ்ந்த துக்கத்தில் தலை வணங்குகிறேன். இது தாங்க முடியாத சோகம். இஸ்ரேல் அவர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது" என தெரிவித்திருந்தார். முன்னதாக இந்த வாரத்தில், காசா பகுதியில் இருந்து இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 3 இஸ்ரேலிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.