இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு
இஸ்ரேல் ஹமாஸிடையே அறிவிக்கப்பட்ட ஆறு நாட்கள் போர் நிறுத்தம் முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது. "பணயக் கைதிகளை விடுவிக்கும் செயல்முறையைத் தொடர மத்தியஸ்தர்களின் முயற்சிகளால்" போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் இதற்கான கால வரம்பை குறிப்பிடவில்லை. ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்டபடி, ஒவ்வொரு பணயக் கைதி விடுவிக்கப்படுவதற்கும், மூன்று பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் என்ற உடன்பாட்டின் அடிப்படையில், 24 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக, மத்தியஸ்தரான கத்தார் தெரிவித்துள்ளது.
97 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
போர் நிறுத்தத்தில் ஈடுபட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கடந்த புதன்கிழமை ஒப்புக்கொண்ட நிலையில், வெள்ளிக்கிழமை முதல் போர் நிறுத்தம் தொடங்கியது. ஆறு நாட்கள் நடந்து வந்த போர் நிறுத்தத்தில் தற்போது வரை, தாய்லாந்து, ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 97 பணய கைதிகளும், இஸ்ரேல் சிறைகளில் உள்ள 180 பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நூற்றுக்கணக்கான லாரிகளில் நிவாரண பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருள்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் இன்று விடுவிக்கப்படும் நபர்களின் பட்டியல், ஹமாஸ் இடமிருந்து கிடைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், எத்தனை நபர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.