ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை நெருங்கும் இஸ்ரேல்
தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிர்படுத்தி உள்ள நிலையில், அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சின்வாரின் வீட்டை இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்துள்ளதாகவும், "அவரைக் கண்டுபிடிக்க இன்னும் சிறிது நேரம் ஆகும்" என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். "நேற்று இரவு எங்கள் படைகள் காசா பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று உத்தரவிட்டேன்." "தற்போது சின்வாரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். அவரது வீடு அவரது கோட்டை அல்ல, அவர் தப்பி ஓட முடியும், ஆனால் அவரை கண்டுபிடிக்க நீண்ட காலமாகாது" என நெதன்யாகு கூறினார்.
யார் இந்த யாஹ்யா சின்வார்?
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்த யாஹ்யா சின்வார், கடந்த 2017 ஆம் ஆண்டு ஹமாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இஸ்ரேலால் கைது செய்யப்படும் வரை, யாஹ்யா சின்வார் அல்-மஜ்த் பாதுகாப்பு எந்திரத்தின் தலைவராகவும், இஸ்ரேல் உளவுத்துறையினருடன் நெருங்கி செயல்படும் பாலஸ்தீனர்களை கொலை செய்யும் இரக்கமற்றவராகவும் அறியப்பட்டார். கடந்த 1988 ஆம் ஆண்டு, இரண்டு இஸ்ரேல் வீரர்களை கடத்தி கொலை செய்ததற்காகவும், நான்கு பாலஸ்தீனர்களை கொன்றதற்காகவும் சின்வாருக்கு அடுத்தடுத்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. காசாவில் சுரங்கங்களில் பதுங்கி இருந்தபடி, டெய்ஃப் என்ற மற்றொரு ஹமாஸ் தளபதியுடன் இணைந்து, சின்வார் பணய கைதிகள்- பாலஸ்தீன சிறை கைதிகள் விடுதலை பேச்சுவார்த்தை மற்றும் ராணுவ நடவடிக்கைகளை வழி நடத்துவதாக கூறப்படுகிறது.