அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்
திட்டமிட்டபடி இன்று காலை உள்ளூர் நேரப்படி 10:00 மணி அளவில் போர் நிறுத்தம் நடைபெறாததால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று, நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்யவும், அதற்கு பதிலாக பணயக் கைதிகள் மற்றும் பாலஸ்தீனை சிறைக் கைதிகளை விடுவிக்க, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், போர் நிறுத்தும் ஒப்பந்தத்தில், ஹமாஸ் மற்றும் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த கத்தார் நாடு கையெழுத்திடாததால், போர் நிறுத்தம் தாமதமாக, இஸ்ரேல் அதிகாரி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்தத்திற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ், அந்நாட்டிற்குள் ஊடுருவி 240க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றது. தற்போது நிறைவேற்றப்பட இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில், குறைந்தபட்சம் 50 இஸ்ரேலிகள்- அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட, நாள் ஒன்றுக்கு 10 நபர்களுக்கு குறையாமல் நான்கு நாட்களுக்கு விடுவிக்கப்படுவர். மேலும், ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிக்க விடுவிக்க போர் நிறுத்தம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதேசமயம், இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பில் உள்ள 300 பாலஸ்தீனிய கைதிகள் எவ்வாறு விடுவிக்கப்படுபவர்கள் என்பது குறித்த தகவல் இல்லை. இது தொடர்பான முடிவுகள் எடுக்கவும், முதல் நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
300 ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
காசாவில் பகுதியில் 300 ஹமாஸ் இலக்குகள் மீது நேற்று தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளனர். இதில், கட்டளை மையங்கள், சுரங்கங்கள், ஆயுதக் கிடங்குகள், ஆயுத உற்பத்தி தளங்கள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை ஏவுதளங்கள் ஆகியவை அடங்கும். காஸாவின் ஜபாலியா பகுதிகளில் பல்வேறு இலக்குகள் அளிக்கப்பட்டதாகவும், இஸ்ரேல் படைகளை நோக்கி வந்த ஹமாஸ் தீவிரவாதிகள் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கூறியுள்ளனர்.
ஹமாஸ் தலைமையை ஒழிக்க மொசாத்துக்கு உத்தரவிட்ட இஸ்ரேல் பிரதமர்
உலகம் முழுவதும் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையை ஒழிக்க, அந்நாட்டின் உலக அமைப்பான மொசாட்க்கு உத்தரவிட்டுள்ளதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியவர், "ஹமாஸின் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மொசாத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என தெரிவித்தார். பெரும்பான்மையான ஹமாஸ் உயர் மட்ட தலைவர்கள், லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் கத்தாரில் வாழ்வது குறிப்பிடத்தக்கது.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது
அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் சில மருத்துவர்கள், இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை டைம்ஸ் ஆப் இஸ்ரேல் முதலில் வெளியிட்ட நிலையில், மருத்துவமனையின் தலைவரும் உறுதிப்படுத்தினார். இருப்பினும் இஸ்ரேல், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பினரின், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருவதாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூறி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் இஸ்ரேல் வெளியிட்டு இருந்தது. இருப்பினும் அம்மருத்துவமனை மருத்துவர்கள் இதை மறுத்து வந்தனர். தற்போது இது தொடர்பாக விசாரிப்பதற்காகவே, அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனைக்கு அருகில் உள்ள வீடுகளிலும் சுரங்கப்பாதைகளை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.