இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்
பல நாட்களாக நீடித்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மிகப்பெரும் திருப்புமுனையாக, இஸ்ரேலும், ஹமாஸும் நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, அக்டோபர்-7 அன்று கடத்திச்செல்லப்பட்ட பணயக்கைதிகளில் 50 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று இரு தரப்பும் புதன்கிழமை அறிவித்தன. இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை இரவு முழுவதும் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. அந்த கூட்டத்தின்போது, அவர் "கடினமான முடிவு, ஆனால் இது சரியான முடிவு" என்று அமைச்சர்களிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் அரசின் செய்தித் தொடர்பாளர் AFPஇடம் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் கீழ், குறைந்தது 50 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
10 கூடுதல் பணயக்கைதிகளுக்கு, ஒரு நாள் கூடுதல் போர் நிறுத்தம்
மேலும் அவர், விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு 10 கூடுதல் பணயக்கைதிகளுக்கும், ஒரு கூடுதல் நாள் போர்நிறுத்தம் இருக்கும் என ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். மறுபுறம், ஹமாஸ் அமைப்பு, "மனிதாபிமான போர்நிறுத்தத்தை" வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, இஸ்ரேலிய சிறைகளில் இருந்தும், 150 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையை தொலைத்து விட்ட காஸா வாசிகளுக்கு இந்த தற்காலிக போர் நிறுத்தமானது, சற்று நிம்மதியை தரக்கூடும். முன்னதாக மனிதாபிமான போர்நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல், சர்வதேச அழுத்தத்திற்கு ஆளானது. தற்போது, இந்த போர் இடைநிறுத்தத்திற்கு, மத்தியஸ்தராக செயல்பட்டது கத்தார் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.