Loading...
'கடைசி மூச்சு வரை போராடுவோம்!' ஐநா சபையில் புகைப்படங்களைக் காட்டி முழங்கிய ஈரான் அதிபர்; அமெரிக்க பிரதிநிதிகள் வெளிநடப்பு
கடைசி மூச்சு வரை போராடுவோம் என ஐநா சபையில் புகைப்படங்களைக் காட்டி ஈரான் அதிபர் முழக்கம்

'கடைசி மூச்சு வரை போராடுவோம்!' ஐநா சபையில் புகைப்படங்களைக் காட்டி முழங்கிய ஈரான் அதிபர்; அமெரிக்க பிரதிநிதிகள் வெளிநடப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 24, 2026
06:29 am

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தேவையில்லாமல் போரை திணித்துள்ளதாக கடும் குற்றம்சாட்டினார். ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்கவில்லை என்றும், ஆனால் தற்காப்பிற்காகத் தாய்நாட்டைக் காக்க தங்கள் நாட்டின் கடைசி மூச்சு வரை வீரியத்துடன் போராடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார். ஈரான் அதிபரின் இந்த உரையால் ஐநா சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சர்வதேச அரசியல் அரங்கிலும் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் வெளிநடப்பு

ஈரான் அதிபரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் வெளிநடப்பு

ஈரானின் மீனாப் பகுதிப் பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் பலியான பிஞ்சுக் குழந்தைகளின் புகைப்படங்களையும், போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படத்தையும் அதிபர் பெசெஷ்கியான் சபையில் நேரடியாகக் காட்டினார்.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களே காரணம் என குற்றம்சாட்டி அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, அவையிலிருந்த அமெரிக்க பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர்.

பதிலடி

டிரம்பின் பயங்கரவாத குற்றச்சாட்டிற்கு ஈரான் அதிபர் கொடுத்த காட்டமான பதிலடி

ஈரானை பயங்கரவாத நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்ததற்கு பதிலளித்த பெசெஷ்கியான், "நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல.

மாறாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்குப் பலியானவர்கள்." எனக் கூறினார்.

மேலும், "இஸ்ரேலிடம் பேரழிவு தரும் அணு ஆயுதங்கள் இருக்கும் போது, ஈரானை மட்டும் பன்னாட்டு ஆய்வாளர்கள் சோதிக்கத் துடிப்பது விசித்திரமான முரண் என்றும், இஸ்ரேல் அப்பாவி மக்களைக் கொல்கிறது.

ஆனால் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன." என்றும் சாடினார்.

ADVERTISEMENT

பேச்சுவார்த்தைக்குத் தயார்

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் தூதரக பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவிப்பு

ஈரானை முற்றிலும் அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலளித்த அதிபர், மிரட்டல் மொழிகளை ஈரான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனத் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், பலவந்தமான அதிகாரப் பிரயோகம் இல்லாதபட்சத்தில், அமெரிக்காவுடன் தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் கலந்துரையாடல்களுக்குத் தங்கள் நாடு எப்போதும் தயாராகவே இருப்பதாகத் தெரிவித்தார்.

போரைத் தவிர்க்க விரும்புவதாகக் கூறிய அதிபர் பெசெஷ்கியான், சர்வதேச அமைதிக்கான தனது கதவுகள் திறந்தே இருப்பதாகவும் தனது உரையை முடித்தார்.

ADVERTISEMENT