டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டதாக அமெரிக்கா உளவுத்துறைக்கு தகவல்
முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சித் தலைவருமான டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் சதித் திட்டம் தீட்டிவருவதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சமீபத்தில் உளவுத் தகவல்கள் கிடைத்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வளர்ச்சி டிரம்பைச் சுற்றி இரகசிய சேவை பாதுகாப்பை அதிகரிக்க வழிவகுத்தது என அந்த அறிக்கை மேலும் கூறியது. எனினும், சில தினங்களுக்கு முன் பேரணியின் போது ட்ரம்பை நோக்கி சுட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற நபர், இந்த ஈரானிய சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சிஎன்என் தெரிவித்துள்ளது. பென்சில்வேனியா பேரணிக்கு முன்னரே இந்த அச்சுறுத்தல் குறித்து இரகசிய சேவை மற்றும் டிரம்ப்பிடம் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த குற்றசாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது
ஈரான் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, "ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கை" என்று குறிப்பிட்டது. "ஈரான் கண்ணோட்டத்தில், டிரம்ப் ஒரு குற்றவாளி தான். அவர் ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஈரான் அவரை நீதிக்கு கொண்டு வருவதற்கான சட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். ஜனவரி 2020 இல் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதற்காக ஈரான் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கணிக்கின்றனர்.