'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
மாலத்தீவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் "குறுகிய பார்வையை" காட்டுகிறது என்றும், இந்தியா நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது என்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி கூறியுள்ளார். இதற்கிடையில், மாலத்தீவு தற்போது சீனாவின் பேச்சை கேட்டு நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார். இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் 3 மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசியிருந்தனர்.
"இந்தியா எல்லா நேரங்களிலும் நமக்கு உதவி இருக்கிறது": மாலத்தீவின் முன்னாள் அமைச்சர்
இதனால், மாலத்தீவு மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் சேதமடைந்துள்ளன. மாலத்தீவு அரசாங்கம், இந்தியப் பிரதமருக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர்கள் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்று மறுத்துள்ளது. மேலும், அப்படிப்பட்ட கருத்துக்களை கூறிய 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், "இது தற்போதைய அரசாங்கத்தின் குறுகிய பார்வையாகும். நாங்கள் அனைவருடனும் நட்புடன் இருக்கும் ஒரு சிறிய நாடுதான். ஆனால் இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அதேபோல பாதுகாப்பு கவலைகளையும் நமது இரு நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா எல்லா நேரங்களிலும் நமக்கு உதவி இருக்கிறது." என்று கூறியுள்ளார்.
மாலத்தீவு அதிபரை பதவி நீக்க அழைப்பு விடுக்கும் நாடாளுமன்ற தலைவர்
"திறன் மேம்பாடு, ஆயுதம் வழங்குதல், மேலும் நம்மைத் தன்னிறைவு உள்ள நாடாக மாற்றவும் பாதுகாப்புத் துறையில் இந்தியா நமக்கு உதவ முயற்சித்து வருகிறது" என்றும் மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பிரதமர் மோடி குறித்த பிரச்சனைக்கு மத்தியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அதிபர் முகமது முய்ஸுவை பதவி நீக்குவதற்கு மாலத்தீவின் நாடாளுமன்ற சிறுபான்மைத் தலைவர் அலி அசிம் அழைப்பு விடுத்துள்ளார். "ஜனநாயகவாதிகளாகிய நாங்கள், நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும், அண்டை நாடுகளுடன் உறவை பேணுவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அதிபர் முய்ஸுவை ஆட்சியில் இருந்து அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புகிறீர்களா? MDP செயலகம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடங்கத் தயாராக உள்ளதா?" என்று அவர் கூறியுள்ளார்.