காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி
அமெரிக்க மண்ணில் கலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரபடுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், தொடர் நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, அமெரிக்கா, இந்தியாவிற்கு இடையே முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளில், தீவிரவாதிகள் உள்ளிட்டவர்கள் குறித்த தகவல்களை, அமெரிக்கா இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக, விசாரிப்பதற்காக நவம்பர் 18ல் இந்தியா சார்பில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மீது குற்றம் சாட்டிய அமெரிக்க நீதித்துறை
இந்திய அரசு அதிகாரி ஒருவர், சீக்கிய பிரிவினைவாத தலைவருக்கு எதிராக தோல்வியுற்ற கொலை முயற்சியை திட்டமிட்டதாக, அமெரிக்க நீதித்துறை நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய, இந்திய குடிமகனான 52 வயது நிகில் குப்தா என்பவர், $100,000 பணத்திற்கு ஒரு நபரை பணியமர்த்த முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அந்த பணியமர்த்த முயன்ற நபர் ரகசிய பெடரல் அதிகாரி ஆவார். இந்த கொலை சதி திட்டம் குறித்து, இந்தியாவின் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் விவாதித்ததாகவும், அவர்கள் "ஆச்சரியம்" மற்றும் "கவலை" அடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நிகில் குப்தா அவருக்கும் இந்திய அதிகாரிக்கும் தொடர்புள்ளதாக கூறும் அமெரிக்கா
பெயரிடப்படாத அல்லது குற்றம் சாட்டப்படாத ஒரு இந்திய அரசாங்க அதிகாரியால், குப்தா இயக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது. குப்தா, மே மாதம் இந்திய அரசாங்க ஊழியர் ஒருவரால், படுகொலைகள் செய்வதற்காக பணியமர்த்தப்பட்டதாகவும், இவர்கள் இருவரும் டெல்லியில் சந்தித்து இது தொடர்பாக திட்டமிட்டதாகவும், அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். "நாம், நம் அனைத்து இலக்குகளையும் தாக்குவோம்" என குப்தா அந்த அதிகாரிக்கு செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், ஜூன் மாதம் கனடாவில் நிஜார் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள், ரகசிய பெடல் அதிகாரியிடம், "நிஜாரும் அவர்களது இலக்கு" எனக் குப்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்ட குப்தா
அவர் நியூயார்க் நகரில், கொலை செய்யும் நபரை சந்திக்க விரும்பியதாகவும், அதற்கு பதிலாக, அவர் ஒரு இரகசிய அதிகாரியை சந்தித்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஜூன் 9ஆம் தேதி, குப்தா தனது உதவியாளர் மூலம் $15,000 டாலர்களை வழங்கியதாகவும், அதற்கான புகைப்படம் உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் அந்த குற்றப்பத்திரிகை, இந்திய அதிகாரியால் பணியமர்த்தப்படுவதற்கு முன் குப்தா, சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டுகிறது. இது, சர்வதேச குற்றச் செயல்களின் மிகப்பெரிய நெட்வொர்க்கையும், சாத்தியமான அரசாங்க கூட்டுறவையும் பரிந்துரைக்கிறது. இந்நிலையில், ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் குப்தா செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்.