இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் மனிதாபிமான தேவைகளை கண்டறிவதற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்வார் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார். ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் ஏற்கனவே 3 நாள் பயணமாக இஸ்ரேல் சென்று திரும்பிவிட்டார். அவர் இஸ்ரேலுக்கு சென்றிந்த போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்துடனும் அவர் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பொதுமக்களின் உயிரிழப்புகளை தடுப்பதற்கு முடிவுகள் எடுக்கப்படுமா?
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் குறித்து பதிவிட்டிருக்கும் பளிங்கன், "இஸ்ரேல்-அமெரிக்காவின் ஒற்றுமையை பறைசாற்றுவதற்காகவும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்களின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்க்காகவும்" அமெரிக்க அதிபர் நாளை இஸ்ரேல் செல்வார் என்று கூறியுள்ளார். "ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாதிகளிடமிருந்து தனது மக்களைப் பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமையும் கடமையும் உள்ளது" என்றும் பிளிங்கன் கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்கும் வகையிலும், ஹமாஸுக்கு பயனளிக்காத வகையில் காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகவும்" தான் நாளை இஸ்ரேல் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.