
முக்கிய தளபதி முகமது சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஹமாஸ்
செய்தி முன்னோட்டம்
ஹமாஸ் அமைப்பின் காசா ராணுவத் தளபதியான முகமது சின்வார் கொல்லப்பட்டதை, இஸ்ரேல் முதலில் அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு, தற்போது ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அவரை தியாகி என்று குறிப்பிட்டு, ஹமாஸ் அமைப்பு அவரது புகைப்படத்தை வெளியிட்டது. ஆனால், அவரது மரணம் குறித்த குறிப்பிட்ட விவரங்களை ஹமாஸ் வெளியிடவில்லை. இந்த ஆண்டு மே மாதம், தென் காசாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். ஹமாஸை முழுமையாகத் தோற்கடிக்க இஸ்ரேல் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், அவர்களின் நிதி ஆதாரங்களை அழித்து வருவதாகவும் அப்போது நெதன்யாகு கூறியிருந்தார்.
முகமது சின்வார்
முகமது சின்வாரின் பின்னணி
1975 இல் பிறந்த முகமது சின்வார், ஹமாஸ் அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வாரின் இளைய சகோதரர் ஆவார். யஹ்யா சின்வாரும் 2024 இல் காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்டார். முகமது சின்வார் 1991 இல் ஹமாஸில் சேர்ந்து, விரைவாக முன்னேறி, 2005 இல் கான் யூனிஸ் பிரிகேடின் தளபதியாக உயர்ந்தார். 2006 இல் இஸ்ரேலிய வீரர் கிலாட் ஷாலிட்டைக் கடத்தியதில் அவர் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலிய உளவுத்துறையின்படி, ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களின் உயிரிழப்புக்குக் காரணமான அக்டோபர் 7 தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர்களில் முகமது சின்வாரும் ஒருவர். அவரது மரணம் ஹமாஸ் தலைமை அமைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது.