Loading...
CIA, FBI-ஐத் தொடர்ந்து அமெரிக்க விமானப்படையின் 'Cloud One' தளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள்
CIA, FBI-ஐத் தொடர்ந்து அமெரிக்க விமானப்படையின் 'Cloud One' தளம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்

CIA, FBI-ஐத் தொடர்ந்து அமெரிக்க விமானப்படையின் 'Cloud One' தளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2026
09:10 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது அடுத்தடுத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அமெரிக்க விமானப்படையின் முதன்மை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் கட்டுப்பாட்டுத் தளமான கிளவுட் ஒன் (Cloud One) ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள் சிஸ்டம் அப்கிரேடு பணிகளின் போது கண்டறியப்பட்ட இந்த ஊடுருவலால் அமெரிக்க ராணுவத்தின் முக்கியத் தந்திரோபாய பணியாளர் மற்றும் தளவாடத் தரவுகளின் பாதுகாப்பு ஆபத்தில் சிக்கியுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு அமெரிக்க சைபர் கமாண்ட் படைப்பிரிவு களமிறக்கப்பட்டுள்ள நிலையில் விமானப்படை இது குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஹேக்கர்கள் ஊடுருவல்

CIA மற்றும் ODNI-யின் ஓபன்-சோர்ஸ் உளவுத்துறை அமைப்பிலும் ஊடுருவல்

அமெரிக்க விமானப்படை மீதான இந்தத் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் மத்திய உளவு நிறுவனமான சிஐஏ மற்றும் தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றின் கணினி அமைப்புகளில் சைபர் ஊடுருவல் நடந்ததை சிஎன்என் ஊடகம் அம்பலப்படுத்தியது.

சமூக வலைதளத் தகவல்கள் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தரவு விற்பனையாளர்களிடமிருந்து பெறப்படும் வகைப்படுத்தப்படாத ஓபன்-சோர்ஸ் உளவுத்துறை தகவல்களைப் பகுப்பாய்வு செய்யும் அமைப்பே இதில் குறிவைக்கப்பட்டுள்ளது.

ரகசியத் தகவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறினாலும் பல்வேறு தரவுகளை ஒன்றிணைக்கும்போது முக்கிய ரகசியங்கள் வெளிப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

டிரம்ப் கவலை

FBI-யின் தேசிய குற்றத் தகவல் மையம் (NCIC) மீதான தாக்குதலும் அதிபர் டிரம்ப் கவலையும்

இதேபோல் அமெரிக்காவின் மத்திய மாநில மற்றும் உள்ளூர் காவல்துறை அமைப்புகள் குற்றவாளிகளின் பதிவுகள் மற்றும் பிடியாணைகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தும் எஃப்பிஐ (FBI) அமைப்பின் தேசிய குற்றத் தகவல் மையத் தரவுத்தளமும் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது.

இது குறித்து நவம்பர் 21 அன்று ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவம் நல்லதல்ல என்றும் தனக்கு இது பிடிக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

நாட்டின் மிக முக்கியமான சட்ட அமலாக்கத் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மையை ஹேக்கர்கள் சிதைக்கக்கூடும் என முன்னாள் எஃப்பிஐ அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

பாதுகாப்பு குறித்த கேள்விகள்

தொடரும் சைபர் ஊடுருவல்களும் அமெரிக்க அரசின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும்

கடந்த செப்டம்பர் மாதமும் எஃப்பிஐ அமைப்பின் ஆட்சேர்ப்பு இணையதளம் வழியாக ஷைனிஹன்டர்ஸ் என்ற ஹேக்கர் குழு ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களைக் குறிவைத்தது தொடர்பாகக் கனடாவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் 2023-ஆம் ஆண்டிலும் எஃப்பிஐ நியூயார்க் அலுவலகக் கணினி அமைப்பு ஹேக் செய்யப்பட்டது.

தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறிந்து அமெரிக்காவின் முக்கியப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் மீது நடத்தப்படும் இந்தத் தொடர் சைபர் தாக்குதல்கள் அமெரிக்க அரசின் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளன.

ADVERTISEMENT