இந்தியா மற்றும் பிரான்ஸ் போராட்டங்களுக்கு பின்னால் சர்வதேச நெட்வொர்க்? பாக்ஸ் நியூஸ் புலனாய்வு அறிக்கை
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இளைஞர் போராட்டங்களை ஒருங்கிணைப்பதாகக் கூறப்படும் 101 சர்வதேச அமைப்புகள் குறித்த அதிர்ச்சித் தகவல்களை ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ளது. இந்த புலனாய்வு அறிக்கை, உலகளாவிய அரசியல் எதிர்ப்புகளை ஒரு நெட்வொர்க் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. Global 'Chaos Inc' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, பிரான்ஸ் மாணவர் போராட்டங்களில் தொடங்கி இந்தியா, ஸ்பெயின் மற்றும் அல்பேனியா உள்ளிட்ட நாடுகளின் போராட்டங்களை கம்யூனிஸ்ட், சோசலிச அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் குழுக்கள் உலக அளவில் இணைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு
இந்தியா - பிரான்ஸ் இணைப்பு; நெவில் ராய் சிங்கம் தொடர்பு
பிரான்ஸை தளமாகக் கொண்ட 'இந்தியன் அலையன்ஸ் பாரிஸ்' (IAP) அமைப்பு, இந்திய மற்றும் பிரெஞ்சு மாணவர் போராட்டங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் குரல் கொடுத்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடத்தப்படும் போராட்டங்களையும் இந்த சர்வதேச நெட்வொர்க் முன்னிறுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையானது ஷாங்காயில் வசிக்கும் அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்கங்குடன் தொடர்புடைய அமைப்புகளான BreakThrough News, கோட்பிங்க் மற்றும் ட்ரைகான்டினென்டல் போன்ற அமைப்புகள் இந்த போராட்ட செய்திகளை உலகளவில் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய சில நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் குழு சம்மன் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது
இந்தியா
இந்தியாவில் அரசியல் சர்ச்சை
ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2025 ஏப்ரலில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை 'முற்போக்கு சர்வதேச அமைப்பு' சந்தித்துப் பேசியதை சுட்டிக்காட்டி, பாஜக தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அல்பேனியாவில் நடைபெற்ற வன்முறை போராட்டங்களைச் சுட்டிக்காட்டி சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் வெளியிட்ட கருத்துகளும் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நவம்பர் 1 அன்று திட்டமிட்டுள்ள போராட்டங்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.