அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானதாக அவரது நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 100. அவர் நிறுவிய அரசியல் ஆலோசனை நிறுவனமான கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் தனது அறிக்கையில், ஜெர்மனியில் பிறந்த கிஸ்ஸிங்கர் கனெக்டிகட்டில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. அவரது பல தசாப்த கால வாழ்க்கையில், கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மற்றும் பல நேரங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரமாக திகழ்ந்தார். கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் நிறுவனம், அவரது மறைவுக்கான காரணத்தை குறிப்பிடவில்லை.
யார் இந்த ஹென்றி கிஸ்ஸிங்கர்?
கடந்த 1923ல் நாஜி ஜெர்மனியில் பிறந்த கிஸ்ஸிங்கர், 1938ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 1943 ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகனான அவர், மூன்று ஆண்டுகள் அமெரிக்க இராணுவத்திலும் பின்னர், புலனாய்வுப் படையிலும் பணியாற்றினார். இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற்ற பின், புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றி வந்தார். அமெரிக்க முன்னாள் அதிபரான ரிச்சர்டு நிக்சனால், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, 1969 ஆம் ஆண்டு கிஸ்ஸிங்கர் நியமிக்கப்பட்டார். பின்னர், 1973 ஆம் ஆண்டு வெளியுறவு துறை செயலாளராக நியமிக்கப்பட்ட கிஸ்ஸிங்கர், அதிபர் ஜெரால்ட் ஃபோர்டு ஆட்சியிலும் வெளியுறவுத் துறை செயலாளராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 1977 ஆம் ஆண்டு அரசாங்க பணியை விட்டு வெளியேறினாலும், பொது விவகாரங்களில் முக்கியமான குரலாக ஒலித்து வந்தார்.
கிஸ்ஸிங்கர் செய்த சாதனைகள் என்ன?
பனிப்போர் உச்சத்தில் இருந்த போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட கிஸ்ஸிங்கர், தனது வெளியுறவு கொள்கையால், அமெரிக்கா மற்றும் சீனா இடைய பதற்றத்தை குறைத்தார். இதன் காரணமாக, 1972 ஆம் ஆண்டு அதிபர் நிக்சன் சீனா பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. வியட்நாமிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கு முக்கிய பங்காற்றிய கிஸ்ஸிங்கருக்கும், வடக்கு வியட்நாமின் லு டக் தோவிற்கும் 1973 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டு நடைபெற்ற அரபு- இஸ்ரேல் போரில், போர் நிறுத்தம் ஏற்பட இவர் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வருட ஜூன் மாதத்தில் அமெரிக்கா- சீனா இடையே உறவுகளை மேம்படுத்த, நூறு வயதிலும் கிஸ்ஸிங்கர் சீனா பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கிஸ்ஸிங்கர் சிக்கிய சர்ச்சைகள் என்னென்ன?
கிஸ்ஸிங்கர், அவரின் வெளியுறவு கொள்கைக்காக பலராலும் பாராட்டப்பட்டாலும், கம்போடியா மற்றும் சிலியில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. நடுநிலையான கம்போடியா மீது தாக்குதல் நடத்தும் அதிபர் நிக்சனின் முடிவை கிஸ்ஸிங்கர் ஆதரித்தார். இந்த கொள்கை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது. மார்க்சிச கொள்கை கொண்ட அதிபராக சால்வடார் அலெண்டே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சிஐஏ சிலியில் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கவும், புதிய அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. கிஸ்ஸிங்கர் இந்த நடவடிக்கையை அங்கீகரித்த குழுவிற்கு, தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கிஸ்ஸிங்கர், 2017ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்புக்கு, ரஷ்யா மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.