அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவருக்கு கூறியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ட்ரம்ப் தனது பதவிக்காலம் முடிந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரருக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான தகவல்களை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மார்-எ-லாகோ கிளப்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரரான அந்தோனி பிராட் என்ற நபருக்கு ட்ரம்ப் தகவல்களை தெரிவித்துள்ளார். ட்ரம்ப் கூறிய ரகசியங்களை, அந்தோனி பிராட் 45 நபர்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில் 10 ஆஸ்திரேலியா அதிகாரிகளும், 3 முன்னாள் பிரதமர்கள் அடங்கும்.
அணுசக்தி நீர்மூழ்கிகள் குறித்து டிரம்ப் கூறிய ரகசியங்கள்
அந்தோனி பிராட்டிடம் முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஒவ்வொரு நீர் மூழ்கி கப்பல்களிலும் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை, ரஷ்ய நீர்மூழ்கிகளால் கண்டுபிடிக்கப்படாமல் எவ்வளவு தூரம் அமெரிக்க நீர் மூழ்கிகளால் அதன் அருகில் செல்ல முடியும் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கூறியதாக சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்தோனி பிராட், அங்கு காகிதம் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் அந்தோனி பிராட் தன் நிறுவனத்தை தொடங்கியிருந்தார். அந்த தொடக்க விழாவில் பிராட்டை ட்ரம்ப், "ஆஸ்திரேலியாவின் மிகவும் வெற்றிகரமான மனிதர்" என புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள்
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவை மாற்ற முயன்றது, அதே ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவை மாற்ற முயன்றது. ட்ரம்ப் தனது ஃப்ளோரிடா எஸ்டேட்டில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் குறித்தான ஆவணங்களை வைத்திருந்தது மற்றும் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு என நான்கு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இதில் ஆவணங்களை தவறாக கையாண்ட வழக்கில் மட்டும் அவர் மீது 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.