நடுவானில் விமானிகள் இடையே பயங்கர சண்டை: 'ஹைஜாக்' சிக்னலால் பதறிய இஸ்ரேல், சவுதியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
செய்தி முன்னோட்டம்
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கு பறந்து கொண்டிருந்த பிளைதுபாய் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானம், நடுவானில் திடீரென அவசரநிலையை பிரகடனப்படுத்தி, சவுதி அரேபிய வான்வெளியில் பாதையை மாற்றித் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கு சென்ற FZ1073 விமானத்தில், அதன் இரு விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நடுவானில் 'ஹைஜாக்' (விமானக் கடத்தல்) சிக்னல் அழுத்தப்பட்டு, இஸ்ரேலில் பெரும் பதற்றம் நிலவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
விவரங்கள்
நடுவானில் நடந்த மோதலும், கடத்தல் சிக்னலும்
சுமார் 180 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், யோர்டான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது அதன் இரு விமானிகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றிப் பலத்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மோதலின்போது முதலில் பொதுவான அவசரநிலையை குறிக்கும் '7700' சிக்னல் அனுப்பப்பட்டது.
சில வினாடிகளிலேயே, விமான கடத்தலை குறிக்கும் சர்வதேச அவசரக் குறியீடான '7500' மாற்றி அனுப்பப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, விமானம் யோர்டான் எல்லையிலிருந்து திடீரெனத் திரும்பி 15,000 அடி என்ற மிகவும் குறைந்த உயரத்தில் சவுதி அரேபியா நோக்கி பறக்கத் தொடங்கியது.
பதற்றம்
பதறிய இஸ்ரேல்; வான்வெளியை மூடி போர் விமானங்களை அனுப்பியது
கடத்தல் சிக்னல் வந்ததைத் தொடர்ந்து இஸ்ரேலிய வான்வெளி உடனடியாக மூடப்பட்டு, இஸ்ரேலிய விமானப்படை தனது போர் விமானங்களை அவசர அவசரமாக வான்வெளியில் ஏவியது.
இந்த சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சருடன் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தினார்.
எனினும், பின்னர் இது விமானக் கடத்தல் சம்பவம் அல்ல என்றும், சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Prime Minister's Office announcement:
— Prime Minister of Israel (@IsraeliPM) September 30, 2026
Following concerns over an aviation incident, Prime Minister Netanyahu held consultations on the matter and is monitoring developments.
The incident is under control, and all measures are currently being deployed in order to return the…
தரையிறக்கம்
சவுதியில் பத்திரமாகத் தரையிறக்கம்
பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு இந்த பயணிகள் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானிகள் மோதலின்போது வேண்டுமென்றே இந்த சிக்னல் அனுப்பப்பட்டதா அல்லது தவறுதலாக அனுப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பிளைதுபாய் நிறுவனம், அவர்களை டெல் அவீவ் அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.