Loading...
ஈரான் பேச்சுவார்த்தையிலிருந்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸை நீக்கினார் டொனால்ட் டிரம்ப்
ஈரான் பேச்சுவார்த்தையிலிருந்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸை நீக்கினார் டொனால்ட் டிரம்ப்

ஈரான் பேச்சுவார்த்தையிலிருந்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸை நீக்கினார் டொனால்ட் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
02:34 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பொறுப்பிலிருந்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸை நீக்கியுள்ளதாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், ஈரானுடன் இனி எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த படுதோல்விக்கு ஈரான் போரே காரணம் என ஜே.டி. வான்ஸ் வெளிப்படையாக விமர்சித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

புதிய பொறுப்பு

ஜே.டி. வான்ஸுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பு என்ன?

டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி, ஜே.டி. வான்ஸின் கவனம் உள்நாட்டு விவகாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி ஆளும் மினசோட்டா, கலிபோர்னியா மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் நடைபெறுவதாக கூறப்படும் ஊழல் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் வான்ஸ் தனது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சி ஆளும் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் பல பில்லியன் டாலர்கள் திருடப்படுவதாக எந்தவித ஆதாரமும் இன்றி குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், அதனைச் சரிசெய்தால் அமெரிக்காவின் கூட்டாட்சி பட்ஜெட்டை விரைவாக சமநிலைப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் தோல்வி

இடைத்தேர்தல் தோல்வியும், வான்ஸின் விமர்சனமும்

கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டையும் வரலாறு காணாத வித்தியாசத்தில் இழந்ததற்கு ஈரான் போரே முக்கிய காரணம் எனக் கூறியிருந்தார்.

"அடுத்த 6 ஆண்டுகளுக்கு செனட் சபையை இழக்குமளவுக்கு இந்தப் போர் அவசியமானதா என்பதை ஆதரிப்பவர்கள் வெளிப்படையாக வாதிடட்டும்; அதுவே நேர்மையான வாதமாக இருக்கும்" என வான்ஸ் சவால் விடுத்திருந்தார்.

முன்னதாக, தேர்தலில் இந்த போர் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட டிரம்ப், வான்ஸின் கருத்தில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

ஒப்பந்தம்

"ஒப்பந்தம் போடும் காலம் முடிந்துவிட்டது": டிரம்ப்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றிய ஜே.டி. வான்ஸ், கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு சென்று போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தார்.

மேலும், அவர் ஈரானிய மூத்த அதிகாரி ஒருவரை நேரில் சந்தித்து பேசவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்த நிலையில்தான் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

"ஈரானுடன் ஒப்பந்தம் செய்யும் நாட்கள் எப்போதோ முடிந்துவிட்டன" என அறிவித்துள்ள டிரம்ப், ஈரானின் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பால், இனி ஈரானுடனான தூதரகத் தொடர்புகளை யார் கையாள்வார்கள் என்ற கேள்வியும் நிச்சயமற்ற தன்மையும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT