காசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள்
காசாவில் போரைக் கையாண்ட விதத்தை கண்டித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளது. ஊடக அறிக்கையின்படி, பல மாணவர்களின் பெற்றோர்களும் கல்விக் கட்டணத்தைத் திரும்ப தரக் கோரியுள்ளனர்.ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், கொலம்பியா பல்கலைக்கழகத் தலைவர்,"மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் எடுக்கும் கூடுதல் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம்." எனக்கூறினார்.
ஆசிரியர்களும் பணியாளர்களும் ஆன்லைனில் பணிபுரிய உத்தரவு
"மத்திய கிழக்கில் பேரழிவு தரும் ஒரு பயங்கரமான மோதல் நடைபெற்று வருகிறது. வெறியைத் தணிக்கவும், அடுத்தகட்ட நகர்வுகளை பரிசீலிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கவும், திங்கட்கிழமை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கிறேன்" என பல்கலைக்கழக ப்ரெசிடெண்ட் தெரிவித்தார். "ஆன்லைனில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இதனை தேர்வு செய்யவேண்டும். எனினும், அத்தியாவசிய பணியாளர்கள் பல்கலைக்கழக கொள்கையின்படி பணிக்கு வர வேண்டும். வளாகத்தில் வசிக்காத மாணவர்கள் வளாகத்திற்கு வரக்கூடாது என்பதே எங்கள் விருப்பம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகம் முதல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வரை, மாணவர்கள் பலரும் பாலஸ்தீன மக்களுக்காக அணிதிரண்டு, இஸ்ரேலியப் படைகளால் காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்களின் மரணங்களுக்கு பைடனைப் பொறுப்பேற்க்க வலியுறுத்தி வருகின்றனர்.