சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார். அதன்படி, CIA அமைப்பு, சீனாவில் அதன் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் கருத்தை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது என்று CIA -வின் மூன்று முன்னாள் அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்தைப் பற்றிய தவறான கதைகளைப் பரப்புவதற்கும், வெளிநாட்டு ஊடகங்களுக்கு இழிவான உளவுத் தகவல்களைக் கசியவிடுவதற்கும், போலி இணைய அடையாளங்களைப் உருவாக்கியதாகவும், அதற்காக ஒரு சிறிய குழு இரகசிய பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் உலகளாவிய செல்வாக்கை சீர்குலைக்க திட்டம்
தேர்ந்தெடுக்கப்பட்ட CIA செயற்பாட்டாளர்கள், சீனாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் வளரும் நாடுகளுடனான வணிக கூட்டாண்மை உட்பட உலகளாவிய விரிவாக்க முயற்சிகளை குறிவைத்தனர். அவர்கள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஊழல் குற்றச்சாட்டுகளை பரப்பினர் மற்றும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி வீணானது என்று விமர்சித்தனர். அமெரிக்க அதிகாரிகள், நடவடிக்கைகளின் முக்கிய விவரங்களை வழங்கவில்லை என்றாலும், இந்த நடவடிக்கைகள், சீனத் தலைவர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. அதனால் சீன அரசாங்கம் இணையப் பாதுகாப்பிற்காக வளங்களைச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சீனாவின் பதில்
சீனாவின் வெளியுறவு அமைச்சகம், CIA நடவடிக்கையின் செய்திக்கு பதிலளித்துள்ளது. "அமெரிக்க அரசாங்கம், ஊடக தளங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதற்கும், சர்வதேச பொதுக் கருத்தை மாற்றவும் முயற்சி"த்ததாக குற்றம் சாட்டியது. அதற்கு CIA அதிகாரிகளோ, அதன் உலகளாவிய செல்வாக்கை அதிகரிப்பதற்கான சீனாவின் சொந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கான பிரதிபலிப்பே, இந்த இரகசிய பிரச்சாரம் என்று தெரிவித்தனர். தனது ஜனாதிபதி காலம் முழுவதும், டிரம்ப், சீனாவிற்கு மிகவும் வலுவான நிலைப்பாடே கொண்டிருந்தார். எனினும் இந்த இரகசிய நடவடிக்கையின் தாக்கம் தெரியவில்லை, மேலும் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இந்த திட்டத்தை தொடர்ந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை.