ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன?
புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டை அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிப்பார் என்றும், சீனக் குழுவை பிரதமர் லீ கியாங் தலைமை தாங்குவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஒரு நாளுக்கு முன்பு தான், ஜி-20 உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங் கலந்துகொள்வது குறித்து சீனாவின் எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக இந்தியா காத்திருப்பதாக ஜி-20க்கான சிறப்புச் செயலாளர் முக்தேஷ் பர்தேஷி கூறியிருந்தார். ஜி 20 மாநாட்டை ஜி ஜின்பிங் தவிர்ப்பது இதுவே முதல் முறையாகும். செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் வைத்து நடைபெறவுள்ள உச்சிமாநாட்டைத் தவிர்த்துள்ள இரண்டாவது ஜி 20 தலைவர் ஜி ஜின்பிங் ஆவார்.
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க சீனா விரும்பவில்லையா?
முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தன்னால் உச்சிமாநாட்டில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்திருந்தார். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய அதிபருக்கு பதிலாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, தென்னாப்பிரிக்காவில் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் கடைசியாக சந்தித்தனர். இந்திய-சீனா எல்லைப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கவலைகளை ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா அப்போது தெரிவித்திருந்தார். இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க சீனா விரும்பவில்லை, அதனால்தான் ஜி-20 மாநாட்டை ஜி ஜின்பிங் தவிர்க்கிறார் என்று பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.