'பிரண்ட்ஸ்' நடிகருடனான தனது சிறுவயது நட்பை நினைவு கூர்ந்த ட்ரூடோ
ஆங்கிலத்தில் புகழ்பெற்ற சிட்காம் தொடரான 'பிரண்ட்ஸில்,' சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். இவரது திடீர் மரணம் பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பலரும் இவருக்கு தங்களது இரங்கலைகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது கனடா பிரதமரும், பெர்ரியின் சிறு வயது நண்பருமான ஜஸ்டின் ட்ரூடோ, ட்விட்டரில் 'பிரண்ட்ஸ்' நடிகருடனான தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு உள்ளார். "மேத்யூ பெர்ரியின் மறைவு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. நாங்கள் விளையாடிய பள்ளிக்கூட விளையாட்டுகளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்," "உலகெங்கிலும் உள்ள மக்கள் அவர் தந்த மகிழ்ச்சியை ஒருபோதும் மறக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். நன்றி, மேத்யூ" என பதிவிட்டுள்ளார்.
இளம் வயதில் பெர்ரி இடம் அடி வாங்கிய ட்ரூடோ
கனடாவைச் சேர்ந்த பெர்ரியும், பிரதமர் ட்ரூடோவும் ஒரே ஆரம்ப பள்ளியில் பயின்றதாக பீப்பிள் மெகசின் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருமுறை பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெர்ரி, தான் ட்ரூடோவை அடித்ததை குறித்து நினைவு கூர்ந்தார். "நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, ட்ரூடோ நன்றாக விளையாடுவதை பார்த்து எனக்கு பொறாமை, நான் மற்றொரு நண்பருடன் சேர்ந்து ட்ரூடோவை தாக்கினேன்", "பள்ளியிலேயே நான் தாக்கக்கூடிய நபர் அவர் ஒருவர் மட்டும்தான். நான் ஒரு முட்டாள் குழந்தையாக இருந்தேன்" என தெரிவித்திருந்தார். பெர்ரியின் தாயார் சுசான் மாரிசன், ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோவின் செய்திச் செயலாளராகப் பணியாற்றியவர். பியர் ட்ரூடோ கனடாவின் முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.