
மசூத் அசார் எங்க இருக்கார்னே பாகிஸ்தானுக்கு தெரியவில்லையாம்; சொல்கிறார் பிலாவல் பூட்டோ
செய்தி முன்னோட்டம்
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இருக்கும் இடம் பாகிஸ்தானிற்குத் தெரியாது என்றும், இந்தியா நம்பகமான உளவுத்துறை தகவலை வழங்கினால் அவரைக் கைது செய்வதில் மகிழ்ச்சியடைவேன் என்றும் பாகிஸ்தான் அரசியல்வாதி பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறியுள்ளார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்களான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட பதட்டங்களுக்கு மத்தியில் பிலவால் பூட்டோவின் அறிக்கை வந்துள்ளது.
மசூத் அசார்
சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார்
2019 ஆம் ஆண்டில் ஐநாவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார், 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பைத் தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்பு உள்ளிட்ட முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியாவின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராக இருக்கிறார். ஏராளமான ஆதாரங்கள் இருந்தபோதிலும், மசூத் அசார் தனது மண்ணில் இருப்பதை பாகிஸ்தான் பலமுறை மறுத்து வருகிறது. அல் ஜசீராவிடம் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவரான பிலவால் பூட்டோ, ஆப்கானிஸ்தான் ஜிஹாத் உடனான தொடர்புகள் காரணமாக மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று கூறினார்.
ஹபீஸ் சயீத்
காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத்
பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையைத் தாண்டி செயல்பட இயலாமை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானின் நிலைப்பாட்டை அவர் ஆதரித்தார். மேலும், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் தலைமறைவாக இல்லை என்றும், அவர் பாகிஸ்தான் காவலில் இருப்பதாகவும் பிலவால் பூட்டோ மீண்டும் வலியுறுத்தினார். இதற்கிடையே, ஆபரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட தாக்குதல்களில் தனது குடும்ப உறுப்பினர்கள் பத்து பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக மசூத் அசார் கூறியிருந்தது. அவர் குடும்பத்துடன் பாகிஸ்தானில் இருப்பதை வெட்டவெளிச்சமாக காட்டுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.