'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடக்க இருக்கும் 30வது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) உச்சிமாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'சீனாவுக்கு உண்மையான பிரச்சனைகள் இருக்கின்றன' என்று கூறியுள்ளார். ஒரு நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய பைடன், "உலகில் அமெரிக்கத் தலைமையை எவ்வாறு மீண்டும் நிறுவுவது என்பதற்கு அதிபர் ஜி-யும் ஒரு உதாரணம். அவர்களுக்கு உண்மையான பிரச்சனைகள் உள்ளன." என்று கூறியுள்ளார். சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபிலோலி எஸ்டேட் அருங்காட்சியகத்தில் இரு தலைவர்களும் சந்திக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அவர்கள் இருவரும் அந்த அருங்காட்சியகத்தில் தான் சிந்திப்பார்களா என்பதை வெள்ளை மாளிகையும் சீன அரசாங்கமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
காலநிலை நெருக்கடியை எதிர்த்து போராட இருக்கும் அமெரிக்கா-சீனா
பைடன் செவ்வாய்க்கிழமை(உள்ளூர் நேரம்) பிற்பகல் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பைடன் வந்து இறங்கிய சிறிது நேரத்திற்குள் அதிபர் ஜி ஜின்பிங்கும் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கினார். சீன அதிபரை கருவூல செயலாளர் ஜேனட் யெல்லென், கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் மற்றும் சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் ஆகியோர் டார்மாக்கில் வரவேற்றனர். புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்காவும் சீனாவும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட போவதாக புதன்கிழமை உறுதியளித்தன. காலநிலை நெருக்கடி நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும் என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. சான் பிரான்சிஸ்கோவில் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கும் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.