இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்: யாரிந்த யாஹ்யா சின்வார்?
இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலுக்கு பிறகு தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 10 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், யாஹ்யா சின்வார் என்ற பெயர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. யாரிந்த யாஹ்யா சின்வார் என்பதை இப்போது பார்க்கலாம். யாஹ்யா சின்வார் ஹமாஸ் பயங்கரவாத குழுவின் முக்கிய தலைவர் ஆவார். இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர இவர் என்று கூறப்படுகிறது. 1962இல் பிறந்த சின்வார், எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வளர்ந்தார். அதன் பிறகு, சின்வாரின் குடும்பம் தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோனில் குடியேறியது.
சின்வார் எப்படி பெரும் பயங்கரவாதி ஆனார்?
ஆனால் 1948இல் இஸ்ரேல் அல்-மஜ்தால் நகரை கைப்பற்றிய பின்னர் அவர்கள் காசாவில் இருந்து குடியேற வேண்டியதாகிவிட்டது. அதன் பின்னர், சின்வார் காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து, 1982இல் சின்வார் முதன்முதலில் நாசகார நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், பாலஸ்தீனிய இயக்கத்திற்குள் இருக்கும் இஸ்ரேலின் உளவாளிகளை கண்டுபிடிக்கும் ஒரு பிரிவை உருவாக்க அவர் சலா ஷெஹாடே என்பவருடன் இணைந்து பணியாற்றினார். 2002ஆம் ஆண்டு ஹமாஸின் இராணுவப் பிரிவுக்கு சின்வார் தலைமை தாங்கிய போது, அவருடன் பணியாற்றிய ஷெஹாடே இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1987இல் ஹமாஸ் நிறுவப்பட்ட பிறகு, சின்வாரும் அவர் நிறுவிய பிரிவும் ஹமாஸ் படையின் பெரும் ஆயுதங்களாக மாறின.
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் 22 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்ட சின்வார்
1988ஆம் ஆண்டில், சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் நான்கு பாலஸ்தீனியர்களைக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு, அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2006இல், ஹமாஸின் இராணுவப் பிரிவு இஸ்ரேல் எல்லைக்குள் ஒரு சுரங்கப்பாதையை அமைத்து இஸ்ரேல் இராணுவச் சாவடி மீது தாக்குதல் நடத்தியது. அதில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். அப்போது, கிலாட் ஷாலித் என்ற ஒரு இஸ்ரேல் பிணையக்கைதியாக பிடிக்கப்பட்டார். இஸ்ரேல் வீரர் ஷாலித்தை ஹமாஸ் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைத்தது. அதன் பின், 2011இல் கையெழுத்திடப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் ஷாலித்தை ஹமாஸ் விடுவித்தது.
காசாவை கட்டுப்படுத்தி வரும் ஹமாஸின் தலைவராக உருவெடுத்த சின்வார்
அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஷாலித்தின் விடுதலைக்காக, இஸ்ரேல் 1,027 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தது. அந்த கைதிகளில் சின்வாரும் ஒருவராக இருந்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அப்போது தான் விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட சில ஆண்டுகளில், சின்வார் ஹமாஸ் இராணுவத்தின் பெரும் தலைவர் ஆனார். 2015இல் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சின்வாரின் பெயரும் இருந்தது. 2017இல், காசாவில் ஹமாஸ் தலைவராக சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு, ஹமாஸின் இரண்டாவது மிகப்பெரும் தலைவர் சின்வார் ஆவார். ஆனால், இஸ்மாயில் ஹனியே தற்போது காசாவை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டதால், ஹமாஸின் மொத்த நடவடிக்கையும் சின்வார் தான் கவனித்து வருகிறார்.
'யாஹ்யா சின்வார் தான் தீமைக்கு முன்னோடி': இஸ்ரேல் பாதுகாப்புப் படை
கடந்த வாரம் நடந்த இஸ்ரேலிய நகரங்கள் மீதான தாக்குதல்களுக்கு சின்வார் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. "யாஹ்யா சின்வார் தான் தீமைக்கு முன்னோடி. ஒசாமா பின்லேடன் 9/11 தாக்குதலுக்கு பின்னணியில் இருந்ததைப் போல, சின்வார் இதன் பின்னணியில் மூளையாக இருக்கிறார்." என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். "அந்த மனிதரும் அவரது முழு குழுவும் எங்கள் பார்வையில் உள்ளனர். நாங்கள் அவரை பிடிப்போம்." என்று மேலும் அவர் கூறியுள்ளார்.