அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது
கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் நபர்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளையும் பொருட்படுத்தாது, மக்கள் அமெரிக்காவிற்கு நுழைய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்களில், கனடா எல்லையில் 30,010 பேரும், மெக்சிகோ எல்லையில் 41,770 பேரும் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு(UCBP) தெரிவித்துள்ளது. மீதமுள்ளவர்கள் அமெரிக்காவிற்கு நுழைந்ததற்கு பின், கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதிகரித்து வரும் சட்டவிரோதமாக நுழைப்பவர்கள் எண்ணிக்கை
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20 ஆண்டில், 19,883 இந்தியர்கள் பிடிபட்ட நிலையில் தற்போதைய எண்ணிக்கை இதைவிட 5 மடங்கு அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது வழக்குகளில் இருந்து கிடைக்கப்பெற்றது. உண்மையான சட்டவிரோத நுழைவுகள் இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "இது பெரும் பணிப்பாறையின் உச்சி மட்டுமே. ஒவ்வொரு இந்தியர் எல்லையில் பிடிக்கப்படுவதற்கும், 10 இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து இருப்பர்" எனக் குஜராத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் இந்தியாவில், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தோர் அதிகமாக இச்செயல்களில் ஈடுபடுவதாக, சட்டவிரோத குடியேற்ற மோசடிகளை விசாரிக்கும் அதிகாரி தெரிவித்தார்.