மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள்
கடந்த மார்ச் 23 அன்று, மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் மற்றும் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி, 133 பேரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேர், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானபோது அவர்கள் இந்த படுகொலையில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தஜிகிஸ்தான் குடிமக்களான நான்கு பேரையும் மே 22 வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IS பயங்கரவாதக் குழுவின் பிராந்தியப் பிரிவான, IS-கொரசன் பொறுப்பேற்றுக்கொண்ட இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்காக, ஏழு பேர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சந்தேக நபர்கள் நால்வரும் அடங்குவர்.
டிவியில் ஒளிபரப்பான விசாரணை வீடியோ
நேற்று, ஞாயிற்றுகிழமை, ரஷ்ய அரசு நடத்தும் சேனல் ஒன் தொலைக்காட்சியில் நான்கு சந்தேக நபர்களும் விசாரணை அதிகாரிகளால் விசாரிக்கப்படும் காட்சிகள் ஒளிபரப்பானது. ரஷ்யா-பெலாரஸ் எல்லைக்கு அருகாமையில் உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள கட்சன் கிராமத்தில் இந்த சந்தேக நபர்கள் பிடிக்கப்பட்டதாக சேனல் ஒன் கூறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விசாரணையின் போது, குற்றவாளி ஒருவரிடம், இசையரங்கில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டதற்கு, "நான் மக்களை சுட்டுக் கொன்றேன்.. பணத்திற்காக" என்று பதிலளித்தார். உடைந்த ஆங்கிலத்தில் பேசும் அந்த நபர், தனக்கு "அரை மில்லியன் ரூபிள் ($5,425)" வழங்கப்பட்டதாகவும், அதில் பாதி பணத்தை ஏற்கனவே பெற்றதாகவும் கூறுகிறார்.