மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு
மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது. 133 பேரைக் கொன்ற இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு கொராசன்(ஐஎஸ்ஐஎஸ்-கே) பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில், இந்த படுகொலையை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை தடுத்து வைத்து விசாரிக்கும் காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 11 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "குற்றவாளிகள், அமைப்பாளர்கள் மற்றும் இந்த படுகொலைக்கு உத்தரவிட்டவர்கள் ஆகியோர் நியாயமான மற்றும் தவிர்க்க முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள்" என்று உறுதியளித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதல்
"ரஷ்யாவிற்கு எதிரான இந்த தாக்குதல், எங்கள் மக்களுக்கு எதிராக இந்த கொடூரத்தை செய்த பயங்கரவாதிகளின் பின்னால் நிற்கும் அனைவரையும் நாங்கள் அடையாளம் கண்டு தண்டிப்போம்," என்று அவர் சனிக்கிழமையன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார். மார்ச் 23-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலாகும். ஒரு காலத்தில் ஈராக் மற்றும் சிரியாவின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த முயன்ற இஸ்லாமிய அரசு பயங்கரவாதக் குழு, மாஸ்கோவில் உள்ள பெரிய கச்சேரி அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அந்த பயங்கரவாத குழு இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது.