
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி!
செய்தி முன்னோட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்தி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், "முழு நாடும் கிரிக்கெட்டை வணங்குகிறது.
ஆனால் ஒரு கிரிக்கெட் வீரர் கூட பேசவில்லை.
நீங்கள் எங்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் குறைந்தபட்சம் நடுநிலையான செய்தியையாவது போட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
கிரிக்கெட் வீரர்கள், பேட்மிண்டன் வீரர்கள், தடகளம், குத்துச்சண்டை வீரர்கள் என அனைவரும் இதில் மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது." என்று கூறினார்.
kapil dav extends support to wrestlers
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசிய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்
வினேஷ் போகத் மேலும், 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' இயக்கத்தை உதாரணம் காட்டி, "நம் நாட்டில் பெரிய விளையாட்டு வீரர்கள் இல்லை என்பது போல் இல்லை. கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தின் போது, அவர்கள் தங்கள் ஆதரவைக் காட்டினார்கள்.
நாங்கள் அந்த அளவுக்கு கூட தகுதியானவர்கள் இல்லையா? நாங்கள் எதையாவது வென்றால் எங்களை வாழ்த்துவதற்கு நீங்கள் முன்வருகிறீர்கள்.
கிரிக்கெட் வீரர்கள் கூட ட்வீட் செய்கிறார்கள். ஆனால் இப்போது என்ன நடந்தது? அமைப்புக்கு இவ்வளவு பயமா? அல்லது அங்கேயும் ஏதேனும் நடக்கிறதா?" என்று கேட்டுள்ளார்.
இதற்கிடையே வியாழக்கிழமை (ஏப்ரல் 27) கபில்தேவ் போராட்டக்காரர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.