World Cup XI: ஒருநாள் உலகக்கோப்பை அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான உலக விளையாடும் லெவனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா திங்கட்கிழமை (நவம்பர் 13) வெளியிட்டுள்ளது மற்றும் விராட் கோலியை இந்த அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளது. 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலியின் செயல்திறன் மிகவும் அபாரமாக இருப்பதோடு, கிரிக்கெட்டின் நவீன கால ஜாம்பவான்களில் ஒருவராக அவரது நற்பெயரை உறுதிப்படுத்துகிறது. திங்கட்கிழமை நிலவரப்படி, 2023 உலகக்கோப்பை சீசனில் விராட் கோலி ஒன்பது போட்டிகளில் 99.00 என்ற அதிகபட்ச சராசரியுடன் 594 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோராக ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தது உள்ள நிலையில், தனது சேசிங் திறனுக்காக அதிகம் கொண்டாடப்படுகிறார்.
நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் விராட் கோலியைத் தவிர, இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல நட்சத்திர வீரர்களும் சேர்க்கப்பட்டனர். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. எனினும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிறந்த அணி: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ராச்சின் ரவீந்திரா, விராட் கோலி (கேப்டன்), ஐடன் மார்க்ரம், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஆடம் ஜம்பா, ஜஸ்ப்ரீத் பும்ரா. 12வது வீரர்: தில்ஷான் மதுஷங்க.