மூச்சுத்திணற வைக்கும் காற்று மாசு; டெல்லியில் போட்டியை திட்டமிட்டபடி நடத்த ஐசிசி முடிவெடுத்ததன் பின்னணி இதுதான்
2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவம்பர் 6) அன்று டெல்லியில் இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, நச்சு மூடுபனியின் அடர்த்தியான அடுக்கு சில நாட்களாக தேசிய தலைநகரை சூழ்ந்திருந்தது. டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) கடுமையான பிரிவில் இருந்ததால் இரு அணிகளும் தங்கள் பயிற்சி அமர்வுகளையும் சில முறை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்பதில் சிக்கல் எழுந்த நிலையில், கடைசி நேரம் வரை காத்திருக்க ஐசிசி முடிவு செய்தது. இதையடுத்து, ஐசிசியின் ஆலோசனையில் திட்டமிட்டபடி ஆட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஐசிசி திட்டமிட்டபடி போட்டியை நடத்த முடிவு செய்ததன் பின்னணி
பிரபல நுரையீரல் நிபுணரால் நிலைமையை மதிப்பீடு செய்து, அருண் ஜெட்லி மைதானத்தில் அட்டவணைப்படி போட்டியை நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதற்காக, திங்கட்கிழமை ஆட்டத்திற்கு முன்னதாக டெல்லியின் நிலைமையை மதிப்பிடுவதற்கும் சுயாதீன நிபுணர் ஆலோசனைகளை வழங்குவதற்கும் புகழ்பெற்ற நுரையீரல் நிபுணர் டாக்டர் ரன்தீப் குலேரியாவை பிசிசிஐ அழைத்தது. டாக்டர் குலேரியாவின் வழிகாட்டுதலின் கீழ், வளாகத்தைச் சுற்றி தண்ணீர் தெளிப்பான்களை செயல்படுத்துதல் மற்றும் டிரஸ்ஸிங் ரூம் மற்றும் மேட்ச் ஆபீசர்ஸ் பகுதிகளில் ஏர் பியூரிஃபையர்களை நிறுவுதல் உள்ளிட்ட காற்று மாசை தணிக்கும் நடவடிக்கைகளை மைதான ஊழியர்கள் மேற்கொண்டனர். ஸ்டேடியத்தில் உள்ள AQI நாள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு, நிலைமையை சரிசெய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.