PAK vs SL : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை
வியாழக்கிழமை (செப்டம்பர் 14) கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக, மழையால் தாமதமாக தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஓவர்கள் இருதரப்பிலும் முறையே முறையே 45 ஆக குறைக்கப்பட்டு, பின்னர் 42 ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி டிஎல்எஸ் முறையில் வெற்றி
மழை காரணமாக, இறுதியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 42 ஓவர்களில் 252 ரன்கள் வெற்றி இலக்காக டிஆர்எஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியில் குஷால் மெண்டிஸ் 91 ரன்கள் குவித்தாலும், அந்த அணி இலக்கை எட்ட கடுமையாக போராடியது. இறுதியில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை எனும் நிலையில், இரண்டு ரன்களை ஓடி எடுத்து த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதன் மூலம் 12வது முறையாக இறுதிப்போட்டியை எட்டி, ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற சாதனையை இலங்கை தக்கவைத்துள்ளது. எனினும், அதிக முறை கோப்பையை வென்றவர்களில் இந்தியாவுக்கு (6) அடுத்து இரண்டாவது இடத்தில் இலங்கை (5) உள்ளது.