Sports Round Up : குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம்; பாய்மரப்படகில் வெள்ளி; முக்கிய விளையாட்டு செய்திகள்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்ற குதிரையேற்றம் டிரஸ்ஸேஜ் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. சுதிப்தி ஹஜேலா, திவ்யகிரித் சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 209.205 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றியது. இதன் மூலம், 1982 இல் டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்தியா குதிரையேற்றத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளை பொறுத்தவரை, தற்போதைய தங்கத்தையும் சேர்த்து இந்தியா குதிரையேற்றத்தில் மொத்தமாக 4 தங்கம் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாய்மரப் படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் பாய்மரப்படகு வீராங்கனை நேஹா தாக்கூர், மகளிருக்கான டிங்கி ஐஎல்சிஏ-4 போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் தாய்லாந்தின் நோப்பாசோர்ன் குன்பூஞ்சன், நேஹா தாக்கூரை விஞ்சி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாள் முடிவடைந்த நிலையில், இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 14 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் சீனா 53 தங்கங்கள் உட்பட மொத்தம் 95 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாப் 3 வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவிப்பு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற உள்ளது. இந்த போட்டியில், இந்திய அணியில் ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என கேப்டன் ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார். அவர்கள் மூவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ள ரோஹித் ஷர்மா, காயம் காரணமாக அக்சர் படேலும் இடம் பெறமாட்டார் என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
வைரலான கபில்தேவின் கடத்தல் வீடியோ குறித்த உண்மைத்தன்மை அம்பலம்
திங்கட்கிழமை (செப்டம்பர் 25) இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர், 1983 உலகக்கோப்பை வெற்றி நாயகன் கபில்தேவை சிலர் கடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு, அது உண்மையா எனக் கேட்டிருந்தார். இதை பார்த்து சிலர் அதிர்ச்சி அடைந்தாலும், பல ரசிகர்கள் இது விளம்பர ஷூட்டிங் என்றும், பார்வைகளை பெறுவதற்காக இதுபோன்ற யுக்தி கையாளப்படுகிறது என்றும் தெரிவித்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்ட வீடியோ மூலம் இது ஒருநாள் உலகக்கோப்பைக்கான புரோமோ வீடியோ என்பது அம்பலமாகியுள்ளது. கவுதம் காம்பிரும் செவ்வாய்க்கிழமை இந்த வீடியோவை பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) அறிவித்தது. கடந்த சில மாதங்களாக தமிம் இக்பாலின் கேப்டன் பதவி குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வந்த நிலையில், தற்போது அவர் அணியிலிருந்தே நீக்கப்பட்டு ஷகிப் அல் ஹசன் தலைமையில் அந்த அணி களமிறங்க உள்ளது. வங்கதேச அணி: ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தன்சித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன், மஹேதி ஹசன், டன்சிம், டான்சிம், டன்சிப். ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.