Sports Round Up: மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்; இந்திய வாலிபால் அணி காலிறுதிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள்
செர்பியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ஆண்டிம் பங்கால் வெண்கலம் வென்றார். மேலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றுள்ளார். முன்னதாக, 53 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட ஆண்டிம் பங்கால் அரையிறுதியில் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்த நிலையில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்வீடனின் எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரெனை எதிர்த்து வெற்றி பெற்றார். இதன் மூலம், 2023 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றுள்ளார். மேலும், கீதா போகத், பபிதா போகத், பூஜா தண்டா, வினேஷ் போகத் மற்றும் அன்ஷு மாலிக்கிற்கு பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஆறாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வாலிபால் அணி காலிறுதிக்கு தகுதி
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் ஆடவர் வாலிபால் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 12 ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் தைவானை வீழ்த்தியதன் மூலம் இந்த வாய்ப்பை சாத்தியமாகியுள்ளது. ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் இந்திய அணி 25-22, 25-22, 25-21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அமித் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராய் அஷ்வால் (14), வினித் குமார் (12) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இதையடுத்து செப்டம்பர் 24-ம் தேதி நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஜப்பானை எதிர்கொள்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி வெற்றி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஜி சத்யன் மற்றும் ஹர்மீத் தேசாய் அடங்கிய அணி சிங்கப்பூரை எதிர்கொண்டு 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். மேலும் ஏமனுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். இதற்கிடையே மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிங்கப்பூரை எதிர்கொண்டு 3-2 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது. இதன் மூலம் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் முதல் நாள் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்.
2024 யு19 உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
2024 யு19 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்டது. இதன்படி 18 ஆண்டுகளுக்கு பிறகு யு19 உலகக்கோப்பை போட்டி 2024 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4 வரை இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ளது. ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், பிப்ரவரி 4 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடக்க உள்ளது. ஐசிசி முழு உறுப்பினர்களாக உள்ள 12 நாடுகள் மற்றும் தகுதிச் சுற்று மூலம் தேர்வான நமீபியா, நேபாளம் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 16 நாடுகள் போட்டியிடுகின்றன. யு19 உலகக்கோப்பையை பொறுத்தவரை அதிகபட்சமாக இந்தியா ஐந்துமுறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக உள்ளது.
INDvsAUS முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (71), ஷுப்மன் கில் (74), கேஎல் ராகுல் (58) மற்றும் சூர்யகுமார் யாதவ் (50) ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 48.4 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.