Sports Round Up : 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு ரோஹன் போபண்ணா தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் 2023 டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி அடங்கிய ஜோடி தோல்வியைத் தழுவியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா ஜோடியான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 7-5, 2-6, 7-10 என்ற செட் கணக்கில் வீழ்ந்து இரண்டாம் இடம் பிடித்தது. எனினும், இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஏடிபி இறுதிப்போட்டிக்கு இருவரும் தகுதி பெற்றுள்ளனர். ஏடிபி இறுதிப்போட்டியில் போபண்ணா இதற்கு முன்பு கடைசியாக 2015இல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற அனைவரும் சொதப்ப, 40.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் : ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது ரயில்வே அணி
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், ரயில்வே அணி 220 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த பட்டத்தை வென்றது. சிறந்த ஆடவர் அணிக்கான பட்டத்தை 175 புள்ளிகளுடன் சர்வீசஸ் அணியும், பெண்கள் அணிக்கான பட்டத்தை 156 புள்ளிகளுடன் ரயில்வேயும் கைப்பற்றியது. சர்வீசஸின் ஈட்டி எறிதல் வீராங்கனை மனு டிபி 1127 புள்ளிகளுடன் சிறந்த வீரராகவும், மகாராஷ்டிராவின் யமுனா லட்கட் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே, இந்த போட்டியில் ஆடவருக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகம் 39.42 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றது. கடந்த ஆண்டு ரயில்வே 39.75 வினாடிகளில் கடந்து சாதனை படைத்த நிலையில், அதை தற்போது தமிழகம் முறியடித்துள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பையில் டெஸ்ட் விளையாட தகுதி பெற்ற அனைத்து நாடுகளிலும் தோற்ற முதல் அணி இங்கிலாந்து
டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் அனைத்து 11 டெஸ்ட் விளையாடும் நாடுகளிடமும் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1975ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடமும், 1979இல், வெஸ்ட் இண்டீஸ் அணியிடமும் தோற்றது. அதன்பின், இந்தியா மற்றும் நியூசிலாந்திடம் 1983, பாகிஸ்தானிடம் 1987இல், ஜிம்பாப்வேவிடம் 1992, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் 1996, வங்கதேசம் மற்றும் அயர்லாந்திடம் 2011இல் தோற்றது. பின்னர் தற்போது ஆப்கானிஸ்தான் அணியிடமும் தோல்வியைத் தழுவியுள்ளது.
மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ; 34 பேர் கொண்ட முதற்கட்ட அணியை அறிவித்தது இந்தியா
அக்டோபர் 27 ஆம் தேதி இந்தியாவின் ராஞ்சியில் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியாவுடன் சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்த போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியை தேர்வு செய்வதற்காக 34 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. 34 பேரையும் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்திற்கு அளித்துள்ள ஹாக்கி சம்மேளனம், அங்கு அக்டோபர் 16 முதல் 22 வரை பயிற்சி முகாமை நடத்த உள்ளது. இந்த பயிற்சி முகாமுக்கு பிறகு, போட்டியில் பங்கேற்கும் இறுதி அணி தேர்வு செய்யப்படும்.