Sports Round Up : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இப்ராஹிம் சத்ரானின் 129 ரன்கள் மூலம், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த, ஆஸ்திரேலிய வீரர்கள் ஆப்கானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாக, ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், அதன் பின்னர் தனியொரு ஆளாக கடைசி வரை போராடிய கிளென் மேக்ஸ்வெல் இரட்டை சதம் விளாசி, அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிசெய்தார்.
Indian Archery compound mixed team qualifies for semi final in Asian Championship
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி
செவ்வாயன்று பாங்காக்கில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் அதிதி சுவாமி மற்றும் பிரியான்ஷ் அடங்கிய இந்திய அணி காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதியை எட்டியது.
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி முதல் சுற்றில் 'பை' பெற்று 158-151 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
எனினும், கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக அரையிறுதிப் போட்டியை நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, ரிகர்வ் தனிநபர் போட்டிகளில், ஆடவர் பிரிவில் பி.தீராஜ் மற்றும் தருண்தீப் ராய், மகளிர் பிரிவில் பஜன் கவுர் மற்றும் திஷா புனியா ஆகிய இந்திய வில்வித்தை வீரர்கள் நான்காவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
Indian women's hockey rises to sixth spot in FIH rankings
சர்வதேச மகளிர் ஹாக்கி தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி
ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்ற கையோடு, இந்திய ஹாக்கி அணி சர்வதேச மகளிர் ஹாக்கி தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, ஜார்க்கண்டில் நடந்த ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக பட்டம் வென்றது.
இதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய அணி மீண்டும் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையே, தரவரிசையில் நெதர்லாந்து அணி முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், அர்ஜென்டினா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மேலும், பெல்ஜியம் நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் இந்தியாவுக்கு மேலே உள்ளன.
Shakib Al hasan ruled out of ODI WOrld Cup 2023
ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நீக்கம்
நவம்பர் 11 ஆம் தேதி புனேவில் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, திங்களன்று இலங்கைக்கு எதிராக பேட்டிங் செய்தபோது ஷாகிப்பின் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.
போட்டிக்கு பின்னர் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் நீக்கப்பட்டு, அணியில் அனமுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அணியின் துணை கேப்டனாக உள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அணியை வழிநடத்த உள்ளார்.
Glenn Maxwell becomes first player to score double ton in odi world cup
சேசிங்கில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த கிளென் மேக்ஸ்வெல்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் இரட்டை சதம் விளாசினார்.
292 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சால் ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போதிருந்து தனி ஒருவனாக அணியை தூக்கி நிறுத்திய கிளென் மேக்ஸ்வெல் 201 ரன்கள் எடுத்து இரட்டை சதம் விளாசியதோடு அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது வீரர் ஆனதோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங்கில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.