ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் ஆகிய மூன்றிலும் முதலிடம் பிடித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து, ஐசிசி நேற்று டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில், இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், 117 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும், 111 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும் உள்ளது. அதேபோல, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலிலும், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
ஒலிம்பிக் தகுதி சுற்றில், ரோஹித் குமார் மற்றும் அமன் ஷெராவத் தகுதி
இந்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மல்யுத்த போட்டிக்கான தகுதி சுற்றில், இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். எனினும், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச் சுற்றுப் போட்டியில் 57 கிலோ பிரிவில் அமன் ஷெராவத்தும், ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் ரோஹித் குமாரும் இந்தியா சார்பில் பங்கேற்பர். மகளிர் 53 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ் அணி
தற்போது நடைபெற்று வரும் மகளிருக்கான ஐபில் போட்டித்தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு எதிராக நடந்த 17ஆவது லீக் போட்டியில், வெற்றி பெற்று, டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
பிளே ஆஃப் சுற்றுக்கு தாது பெற்றது சென்னை ரைனோஸ்
நடைபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியின் 10ஆவது சீசனில், இந்திய திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், சென்னை ரைனோஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே, கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், நான்காம் அணியாக நேற்று சென்னை ரைனோஸ் இணைந்துள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் பிளே ஆஃப் சுற்று போட்டி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.