ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் நேற்று இரவு தெரிவித்தார். தனக்கு விளையாடும் ஆர்வம் இருந்தாலும், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி காரணமாக தான் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். "பாக்சிங் ரிங்குங்குள் விளையாடும் ஆர்வம் எனக்குள் அப்படியே உள்ளது. ஆனாலும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் வயது வரம்பு சார்ந்த விதி காரணமாக நான் அதை தொடர் முடியாது. 40 வயது வரை மட்டுமே ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டையில் விளையாட முடியும். வயது வரம்பு முடிந்துவிட்டதால் என்னால் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது... நான் ஓய்வு பெறுகிறேன்" என நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி சார்பாக ரோஹித் ஷர்மா தலைமையில் உள்ள இந்திய அணி இவர்களை எதிர்கொள்ளும். முன்னதாக இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டது. அதேபோல KL ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யப்போவதில்லை எனவும் அணியின் பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்தார். இன்று காலை 9:30 மணியளவில் இந்த போட்டி தொடங்கவுள்ளது.
கேலோ இந்தியா போட்டி: ஸ்குவாஷ், தடகளம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 6-வது நாளான நேற்று, ஆடவருக்கான ஸ்குவாஷ் போட்டியில், தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது. இதே போல, மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியிலும், தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது. பெண்களுக்கான 800 மீட்டர் தடகள ஓட்டத்தில் தமிழகத்தின் அன்சிலின் பந்தய தூரத்தை 2:11.36 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல மற்றொரு தமிழக வீராங்கனையான அக்சிலின் பந்தய தூரத்தை 2:11.54 விநாடிகளில் அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான டிரிப்பிள் ஜம்ப், ஆடவருக்கான உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளிலும் தமிழ்நாடு தங்க பதக்கம் வென்றுள்ளது. எனினும், தற்போது வரை, பதக்கப் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன்: கார்லோஸ் அல்கராஸ் காலிறுதியில் தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் தோல்வி அடைந்துள்ளார். காலிறுதி போட்டியில், இவர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ்-ஐ எதிர்கொண்டார். எனினும், 6-1, 6-3, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் கார்லோஸ் தோல்வி அடைந்தார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ், ஆண் ட்ரெஸ்மோல்டெனி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம், இரட்டையர் பிரிவில் உலகின் No.1 வீரர் என்ற அந்தஸ்தை பெற்றார் ரோஹன் போபண்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது
ப்ரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில், 54-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது.