ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துருவ் ஜூரல் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார். அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட 4 சுழற்பந்து வீச்சாளர்களும், சிராஜ், முகேஷ் குமார், பும்ரா, அவேஷ் கான் உள்ளிட்ட 4 வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும் காயம் காரணமாக ஷமி இடம்பெறவில்லை. இந்த அணிக்கு பும்ரா துணை கேப்டனாக செயல்புரிவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ஷியோரன்
ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில்3 பொசிஷன் பிரிவுக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் அகில் ஷியோரன் 460.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 459 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அதேபோல, ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் அணிகள் பிரிவில், இந்தியாவை சேர்ந்த அகில் ஷியோரன், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சுவப்னில் குஷாலே அணி 1,758 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
அல்டிமேட் கோ கோ: இறுதி போட்டியில் சென்னை - குஜராத் மோதல்
அல்டிமேட் கோ கோ சீசன் 2க்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதில் சென்னை குயிக் கன்ஸ் அணியும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் முதல் இரண்டு இடத்திற்காக மோதவுள்ளன. மறுபுறம் 3-வது இடத்துக்கான போட்டியில் ஒடிசா ஜாகர்நட்ஸ் அணியும் தெலுகு யோதாஸ் அணியும் மோதுகின்றன. ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில் நடைபெற்ற அல்டிமேட் கோ கோ சீசன் 2 தொடரில் 6 அணிகள் கலந்து கொண்டது. 16 நாட்களாக நடந்த இந்த போட்டி தொடரில், இதுவரை 32 ஆட்டங்கள் நிறைவு பெற்ற்றுள்ள நிலையில், இறுதிப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா ஓபன் போட்டிக்கு தகுதி பெற்றார் சுமித் நாகல்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த தகுதி டென்னிஸ் போட்டியில் ஸ்லோவாகியா நாட்டின் அலெக்ஸ் மோல்கனை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 2024ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் மெயின் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார், 26 வயதான இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர் சுமித் நாகல். உலக தரவரிசையில் 139-வது இடத்தில் உள்ள சுமித் நாகல், தனது முதல் சர்வீஸ் ஆட்டத்தில் மோல்கானை முதல் செட்டில் 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.