ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
கூடவே,"வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி, இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து காயம் காரணமாக விடுவிக்கப்பட்டார்.
அவர் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார்.
அதன்பின் இடது கணுக்கால் காயத்துக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
கேன் வில்லியம்சன்
மூன்றாவது குழந்தைக்கு தந்தையான கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கேன் வில்லியம்சன் மற்றும் அவரது ஜோடி சாரா ரஹீம்-க்கு மூன்றாவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
வில்லியம்சன் தனது ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகத்தில் தன்னை பின்தொடர்பவர்களுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார்.
இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு மகளும், 1 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
மனைவியுடன் கர்ப்பகாலத்தில் உடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே, வில்லியம்சன் நியூசிலாந்தின் சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஐ தொடரிலிருந்து விலகி இருந்தார்.
மகளிர் ஐபிஎல்
மகளிர் ஐபிஎல்: குஜராத் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி
2வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது.
இதில், நேற்று நடைபெற்ற போட்டியில், குஜராத் - பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி, இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிர் ஐபிஎல் போட்டி தொடரில், மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நீல் வாக்னர்
நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஓய்வு
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர், நியூஸிலாந்து அணிக்காக இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 260 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் நீல் வாக்னர் 5-வது இடத்தில் உள்ளார்.