ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சர்பராஸ் கான், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.
போட்டி முடிந்த பின்னர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வடிவத்தில் அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
அதில், "தவறு வருந்துகிறேன். நான் தான் ரன் எடுத்த அழைத்தேன். நன்றாக விளையாடினாய்" என பதிவிட்டுள்ளார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கால்பந்து
கால்பந்து தரவரிசையில் சறுக்கிய இந்திய அணி
பிபா, கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் இந்திய அணி 15 இடங்கள் சரிந்து, 117-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், இந்திய அணியின் மிக மோசமான தரநிலை இதுதான்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காமல் தோற்றதன் விளைவு இந்த சறுக்கல் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஆசிய கோப்பையை வென்ற கத்தார் 21 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தை பிடித்துள்ளது.
தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.
முதல் மூன்று இடங்களில் முறையே அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து பெற்றுள்ளன
ரஞ்சி கிரிக்கெட்
தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 'சி' பிரிவில் உள்ள தமிழக அணி தனது கடைசி லீக்கில் பஞ்சாப்புடன் இன்று மோதவிருக்கிறது.
இந்த 4 நாள் ஆட்டம் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் நடைபெறும்.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இங்கு ரஞ்சி போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும்.
89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன
கிரிக்கெட்
ஜடேஜாவிற்கு நன்றி கூறிய சர்பராஸ் கான்
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சர்பராஸ் கான், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
போட்டியின் இறுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில், இதுபற்றி கேள்வி எழுப்பட்டபோது, "இப்படி தவறான புரிதலால் அவுட்டாவது விளையாட்டின் ஒரு அங்கம். இப்படி நடப்பது சகஜம். உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா என்னை வழி நடத்தினார். குறிப்பாக களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினாலே ரன்கள் தாமாக வரும் என்று அவர் எனக்கு ஆலோசனை சொன்னார். அதற்கு அவருக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.