Sports Round UP: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து; வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஃப்கானிஸ்தான். ஆஃப்கானிஸ்தான் முதலில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், நியூசிலாந்தின் டாம் லதாம் மற்றும் கிளென் பில்லிப்பஸ் ஆகிய இருவரும் கூட்டணி அமைத்து அணியின் ஸகோரை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். நியூசிலாந்து 288 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவதாகக் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் பேட்டர்கள் நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.4 ஓவர்களில் 139 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவினர். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது போட்டியையும் வென்றது நியூசிலாந்து.
பிரிக்ஸ் போட்டிகள் 2023:
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து நாடுகள் மட்டும் கலந்து கொள்ளும் இந்த ஆண்டிற்காகன பிரிக்ஸ் போட்டிகளானது தென்னாப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, 19 முதல் 21 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்த பிரிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று தொடங்கி, வரும் அக்டோபர் 21ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. நீச்சல், பாட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் பீச் வாலிபால் ஆகிய ஐந்து விளையாட்டுப் போட்டிகளில் மட்டும் மேற்கூறிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா:
ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் 17வது போட்டியில் இன்று புனேயில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை ஏந்திய போதிலும், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது வங்கதேசம். இதுவரை ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகள் மோதிய நான்கு போட்டிகளில் மூன்றில் இந்தியாவும், 2007ம் ஆண்டு மோதிய போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் நிலையில், 31ல் இந்தியாவும், 8ல் வங்கதேசமும் வெற்றி பெற்றிருக்கின்றன. 2022ம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எதிர்கொண்ட நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்றில் வங்கதேச அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி குறித்து வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் கருத்து:
சொந்த நாட்டில் உலக கோப்பை போட்டிகளை எதிர்கொண்டு வரும் இந்திய அணி, அச்சமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாககக் கருத்து தெரிவித்திருக்கிறார் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா. மேலும் அவர், "இந்தியாவின் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். விக்கெட்ட எடுக்கக் கூடிய பந்து வீச்சாளர்கள், அதிரடியாக ஆடக் கூடிய தொடக்க ஆட்டக்காரர்கள், சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த ஸ்பின்னர்கள் என ஒரு சிறப்பான படையாக தயாராகியிருக்கிறது இந்திய அணி." எனத் தெரிவித்துள்ளார். எனினும், வங்கதேச அணி தங்களது முழுத் திறனோடு விளையாடினால் இந்த உலக கோப்பையில் எந்த அணியையும் வீழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ரோகித் ஷர்மாவுக்கு அபராதம்:
இன்று புனேயில் நடைபெறவிருக்கும் இந்தியா மற்றும் வங்கதேச போட்டியைத் தொடர்ந்து புனேயை அடைந்திருக்கிறார் ரோதிக் ஷர்மா. ஆனால், இடையே மும்பை-புனே விரைவுச் சாலையில் அதிவேகமாக காரை இயக்கியதற்காக அவருக்கு மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கிடைத்த தகவல்களின்படி, ரோகித் ஷர்மா 264 என்ற பதிவு எண்ணைக் கொண்ட தன்னுடைய லேம்போர்கினி உருஸ் காரில் அதி வேகமாக பயணம் செய்திருக்கிறார். சில இடங்களில் 200 கிமீ மேற்பட்ட வேகத்திலும், சில இடங்களில் அதிகபட்சமாக 215 கிமீ வேகத்திலும் அவர் காரை இயக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று முறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.