Sports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் இறுதிக்கட்டம் திங்கட்கிழமை (நவம்பர் 13) இரவு 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எக்ஸ் தளத்தில் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகளின் பெரும்பகுதி நவம்பர் 13 அன்று கிடைக்கும் என்று அறிவித்தது. நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 அரையிறுதிகளில் முறையே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 19 ஆம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இறங்கும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து மோர்னே மோர்கல் ராஜினாமா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் ராஜினாமா செய்துள்ளார். மோர்னே மோர்கல் இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியுடன் ஆறு மாத ஒப்பந்தத்தில் இணைந்தார். அவரது முதல் பணி இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும். இந்நிலையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது மற்றும் ஆப்கானிஸ்தானிடமும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதன் விளைவாக, தனது பதவிக்காலம் முடியும் முன்னரேயே மோர்னே மோர்கல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை உலக லெவன் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான தலைசிறந்த உலக லெவன் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். சிறந்த அணி : குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ராச்சின் ரவீந்திரா, விராட் கோலி (கேப்டன்), ஐடன் மார்க்ரம், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஆடம் ஜம்பா, ஜஸ்ப்ரீத் பும்ரா. 12வது வீரர்: தில்ஷான் மதுஷங்க.
வீரேந்திர சேவாக் உள்ளிட்ட மூன்று வீரர்களுக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்களன்று, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் புதிதாக மூன்று கிரிக்கெட் வீரர்களை இணைத்து கவுரவித்துள்ளது. அதன்படி, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் முன்னாள் வெற்றியாளர்களான அரவிந்த டி சில்வா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டயானா எடுல்ஜியும் இந்த கவுரவத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ள மொத்த வீரர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியின்போது இந்த மூன்று ஜாம்பவான்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு தகுதி பெற்ற 8 அணிகளின் பட்டியல்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதில் முதல் 7 இடங்கள் மற்றும் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் ஆகிய ஆகிய நாடுகள் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) நடைபெற்ற இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான இறுதி உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் நெதர்லாந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு பின்தங்கி சாம்பியன்ஸ் டிராபியில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தது. மேலும், இலங்கை கிரிக்கெட் அணியும் தகுதி பெற முடியாத நிலையில், ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடிய இதர 8 அணிகளும், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.