Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 லீலா பேலஸ் ஹோட்டலில் டிசம்பர் 15 முதல் 21 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்துள்ளது. மொத்தம் எட்டு வீரர்கள் பங்கேற்கும் நிலையில், இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் டி. குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோரும் இதில் விளையாட உள்ளனர். 2024இல் கனடாவில் நடக்க உள்ள மதிப்பு மிக்க கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பாக இந்த போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக, கனடாவில் நடக்க உள்ள கேண்டிடேட்ஸ் 2024க்கு ஆர். பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி மற்றும் ஆர்.வைஷாலி ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2030 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மெடல்கள்; மத்திய அமைச்சர் நம்பிக்கை
2030 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 200 பதக்கங்களை வெல்ல முடியும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திங்களன்று கூறினார். இது சமீபத்தில் சீனாவில் செய்த வரலாற்று சாதனையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக நடத்தப்பட்டு வரும் கேலோ இந்தியா விளையாட்டுகள் தற்போது முதல்முறையாக பாரா விளையாட்டுக்கும் தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் 17 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் சர்வீசஸ் விளையாட்டு வாரியத்தைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கான தொடக்க விழாவில் பேசியபோது அமைச்சர் 200 பதக்கங்களை வெல்லும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
2024 இந்திய தொடருக்கான டெஸ்ட் அணியை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
2024 ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அணியில் இன்னும் டெஸ்ட் அரங்கில் இதுவரை அறிமுகமாகாத கஸ் அட்கின்சன், டாம் ஹார்ட்லி மற்றும் ஷோயப் பஷீர் ஆகிய இளம் வீரர்கள் முதல்முறையாக இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி : பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஆலி ராபின்சன் , ஜோ ரூட், மார்க் வுட்.
2024 யு19 உலகக்கோப்பை திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
ஐசிசி யு19 ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2024க்கான திருத்தப்பட்ட அட்டவணையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதன்படி தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11 வரை போட்டிகள் நடைபெற உள்ளன. முன்னதாக, இந்த தொடர் இலங்கையில் நடைபெற இருந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்தது. இதனால், அங்கு நடத்தப்பட இருந்த யு19 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி கடந்த நவம்பர் மாதமே அறிவித்திருந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா தனது தொடக்க போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாட உள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை 2023 : தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி
விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி திங்கட்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. பிரசாத் பவார் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 43.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 103 ரன்களுடனும், விஜய் சங்கர் 51 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதையடுத்து புதன்கிழமை நடைபெறும் அரையிறுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஹரியானாவை எதிர்கொள்ள உள்ளது.