Page Loader
Sports RoundUp: பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி ஷுப்மன் கில் முதலிடம்; இங்கிலாந்து அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

Sports RoundUp: பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி ஷுப்மன் கில் முதலிடம்; இங்கிலாந்து அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2023
08:53 am

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 108 ரன்களும், டேவிட் மாலன் 87 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய மொயீன் அலி அதில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Meg Lanning announces retirement from international cricket

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வியாழக்கிழமை (நவம்பர் 9) அதிகாலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரராக தனது 13 வருட காலப் பணியை முடிவுக்குக் கொண்டுவர இது சரியான நேரம் என்று அறிவித்தார். லானிங் இதுவரை ஆறு டெஸ்ட், 103 ஒருநாள் மற்றும் 132 டி20 என மொத்தம் 241 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் 17 சர்வதேச சதங்கள் உட்பட மொத்தம் 8,352 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சிறப்பையும் கொண்டுள்ளார். முக்கியமாக, கேப்டனாக ஐந்துமுறை ஆஸ்திரேலிய அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

Srilanka Cricket Board invites retired judges to form independent committee

இலங்கை கிரிக்கெட் வாரிய முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்க அழைப்பு

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட இடைக்காலக் குழுவில் அங்கம் வகித்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சுதந்திரமான குழு ஒன்றை அமைக்குமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கையில் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் உறுதிபூண்டுள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு இணங்க, விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட மரியாதைக்குரிய நபர்களை ஒரு சுயேட்சையான குழுவை அமைப்பதற்கு அழைப்புவிடுக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஊழல், முறைகேடுகள் அதிகம் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Chris Woakes becomes first no 8 England batter to score 50 in CWC

ஒருநாள் உலகக்கோப்பையில் கிறிஸ் வோக்ஸ் புதிய சாதனை

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நெதர்லாந்திற்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டியின் போது, கிறிஸ் வோக்ஸ், 8வது இடத்தில் பேட்டிங் செய்து, ஒருநாள் உலகக்கோப்பையில் அரைசதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் ஆனார். முன்னதாக, 2007ல் நியூசிலாந்துக்கு எதிராக பால் நிக்சன் அடித்த 42 ரன்களே இங்கிலாந்து அணியில் எட்டாவது விக்கெட்டுக்கு ஒரு வீரர் எடுத்த அதிகபட்சமாக இருந்த நிலையில், அதையும் தற்போது கிறிஸ் வோக்ஸ் முறியடித்துள்ளார். மேலும், 78 பந்துகளில் தனது முதல் உலகக் கோப்பை சதம் அடித்த பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து கிறிஸ் வோக்ஸ் ஏழாவது விக்கெட்டுக்கு 129 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ICC ODI Rankings Shubman Gill dethrones Babar Azam

பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி ஷுப்மன் கில் முதலிடம்

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம், ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலிக்கு அடுத்தபடியாக முதலிடம் பிடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கிடையே ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையிலும் இந்திய வீரர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் இருந்த முகமது சிராஜ் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். மேலும், குல்தீப் யாதவ் நான்காவது இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா எட்டாவது இடத்திலும், முகமது ஷமி பத்தாவது இடத்திலும் உள்ளனர்.