Sports Round Up: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றம், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா நிதானம்; இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய டெஸ்ட் அணி, அங்கு ரெண்டு போட்டிகளில் விளையாடுகிறது.
முதல்போட்டி நேற்று, செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்ட நிலையில், தென்னாபிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சுமாரான தொடக்கத்தை வழங்கினர். ரோகித் சர்மா 5 ரன்களுக்கு வெளியேறியநிலையில், ஜெய்ஷ்வால் 17 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த வீரர்களில் விராட் கோலி(38), ஷ்ரேயாஸ் ஐயர்(31) சற்று ஆறுதலளித்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 59 ஓவர்களில் 208/8 எடுத்தது. கேஎல் ராகுல்(70*), சிராஜ்(0*) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா சார்பில் வேதப்பந்துவீச்சாளர் ரபாடா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
2nd card
மழை குறுக்கிட்ட போட்டியில் ஆஸ்திரேலியா நிதானம்
ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
தனது கடைசி டெஸ்ட் தொடரில் ஆடும் வார்னர் மற்றும் கவாஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு, 90 ரன்கள் சேர்த்து சிறப்பான துவக்கம் தந்தது. பின்னர் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில் மழை குறிப்பிட்டதால் போட்டி தடைப்பட்டது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 187 சேர்த்திருந்தது.
லாபுசாக்னே மற்றும் ஹெட் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
3rd card
டல்லாஸ் மெட்ரோவில் அகாடமியைத் தொடங்கிய சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்
அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ள சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், கிரிக்கெட்டை ஊக்குவிக்க அங்கு கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பெருநகரப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த அகாடமி, சூப்பர் கிங்சின் ஒன்பதாவது அகாடமி ஆகும்.
ஏற்கனவே சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கு லண்டன், தமிழ்நாடு ஆகிய இடங்களில் வெற்றிகரமான கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
"சூப்பர் கிங்ஸ் அகாடமியை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் விளையாட்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய திறனைக் காண்கிறோம்" என சூப்பர் கிங்ஸ் அகாடமியின் கிரிக்கெட் இயக்குனர் லூயிஸ் மரியானோ தெரிவித்தார்.
4th card
ப்ரோ கபடி தொடர்- புனேரி பல்டன் வெற்றி
தற்போது நடந்து வரும் பத்தாவது புரோ கபடி தொடரின் நேற்றைய ஆட்டத்தில், புனேரி பல்டன் அணியும் பாட்னா பைரேட்ஸ் அணியும், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் மோதின.
இதில், 46-28 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை, புனேரி பல்டன் அணி வீழ்த்தியது.
அதிகபட்சமாக புனேரி பல்டன் அணிக்கு பங்கஜ்மொஹிதே 11 புள்ளிகளும், பாட்னா அணிக்காக சச்சின் 8 புள்ளிகளும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் 31 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் புனேரி அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸ்(26), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்(25), குஜராத் ஜெயண்ட்ஸ்(23) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
5th card
கேல் ரத்னா விருதை திருப்பி ஒப்படைப்பதாக வினேஷ் போகட் அறிவிப்பு
முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், அந்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போர் கொடிதூக்கினர்.
சாக்ஷி மாலிக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடமிருந்து கிளம்பிய எதிர்ப்பை தொடர்ந்து, சம்மேளனம் இடைக்காலமாக கலைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிரான தனது போராட்டத்தில், தனது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும், அர்ஜுனா விருதையும் திருப்பித் தரப்போவதாக வினேஷ் போகட் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
முன்னதாக பஜ்ரங் புனியா அவரது பத்ம ஸ்ரீ விருதை திரும்பி வழங்கிய நிலையில், சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார்.