ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்
இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது. மொத்தம் 48 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறும் மற்றும் இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். அரையிறுதி போட்டிகள் மும்பை வான்கடே மைதானம் மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. எனினும் அரையிறுதி போட்டியை சென்னையில் நடத்தாதது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழையால் அரையிறுதி போட்டிக்கு சென்னை மைதானம் தவிர்ப்பு
அரையிறுதி போட்டியை நடத்துவதற்கான மைதானங்களில் ஒன்றாக எம்ஏ சிதம்பரம் மைதானமும் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முழு வீச்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நவம்பர் மாதம் போட்டிகளை நடத்த முடியாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்ததாக தெரிகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மூத்த அதிகாரி ஒருவர் பெயர் வெளியிட விரும்பாத நிலையில், "வழக்கமாக, பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி, ஏழு நாட்கள் முன்னரோ பின்னரோ தொடங்கும். அதனால்தான் எங்கள் போட்டிகள் அனைத்தும் அக்டோபரிலேயே திட்டமிடப்பட்டுள்ளன." என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.