அகமதாபாத்தில் மட்டும் வேண்டாம்! ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வர பாகிஸ்தான் சம்மதம்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி, ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லேயிடம், இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தங்கள் அணி விளையாடாது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிரெக் பார்க்லே மற்றும் ஐசிசி பொது மேலாளர் ஜியோப் அல்லார்டிஸ் ஆகியோர் நஜாம் சேத்தியை சந்திப்பதற்காக கடந்த வாரம் கராச்சிக்கு சென்றனர். அப்போது ஐசிசி அதிகாரிகளிடம் நஜாம் சேத்தி பாகிஸ்தான் தாங்கள் விளையாடும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை நடுநிலையான இடத்தில் விளையாடக் கோரவில்லை என்று உறுதியளித்ததாக தெரிகிறது.
சென்னையில் போட்டியை நடத்த பாகிஸ்தான் வலியுறுத்தல்
ஐசிசி தலைவர்களுடனான சந்திப்பின்போது ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்குச் செல்ல பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைத்தால், சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் தங்கள் ஆட்டங்களை திட்டமிடுமாறு நஜாம் சேத்தி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இறுதிப் போட்டி போன்ற நாக் அவுட் ஆட்டமாக இல்லாவிட்டால், பாகிஸ்தான் போட்டிகள் அகமதாபாத்தில் நடத்தப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று பார்க்லே மற்றும் அலார்டிஸிடம் சேத்தி உறுதிபட தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கடைசியாக 2005 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலை ஏற்க ஏற்றுக்கொள்ள பிசிசிஐயையிடம் கூறுமாறு ஐசிசி அதிகாரிகளை சேத்தி வற்புறுத்தினார் என்றும் கூறப்படுகிறது.